முழு ஊரடங்கு காலத்தில் எந்தவித அனுமதியுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனையடுத்து, இன்று முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும்  அமல்படுத்தப்படுகிறது. 



இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர், "சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போதும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போதும் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில்  மருத்துவ காரணங்களுக்காக வாகனங்களில் செல்பவர்கள் அதற்கான காரணம் மற்றும் சான்றுகளை காண்பித்துவிட்டு செல்லத்தடையில்லை. சென்னையில் மட்டும் 2000 காவல்துறையினர் ஊரடங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய் பரவலை கட்டுப்படுத்தமுடியும் " என்று தெரிவித்தார்.     


இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் இரவு 10 மணிமுதல் 4 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. 



அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது  இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனை சேவைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. அதேசமயம் முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையிலும் மதியம் 12 முதல் மதியம் 3 மணிவரையிலும் மாலை 6 முதல் இரவு 9 மணிவரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் Zomato மற்றும் swiggy போன்ற ஆன்லைன் உணவு விநியோகம் செய்ய நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. 


முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்படமாட்டாது. கல்லுாரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக (online) வகுப்புகளை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.