சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்கள் எந்த சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள இன்று முதல் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டது. அதன்படி இன்று முதல் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.


சென்னை என்றாலே முக்கிய சின்னமாக விளங்குவது அண்ணா சாலைதான். சென்னைவாசிகள் இந்த பகுதியை கடந்து செல்லாமல் இருக்க முடியாது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதி வழியாக பயணிப்பது உண்டு. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அதுவும் பீக் நேரங்களில் (காலை 9 முதல் 12 மணி வரை, மாலை 5 முதல் 8 மணி வரை) கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது உண்டு. தினசரி மக்கள் இப்பகுதி வழியாக பயணிக்கும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சென்னையில் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று முதல் சென்னை அண்ணா சாலையில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில், “அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டிய கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. 



  • ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணாசாலை X ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை.

  • பட்டுள்ளாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

  •  ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஓயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

  • இராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

  •  திரு.வி.க. x ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் ரோட்டில் வத்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

  • அண்ணாசாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.