புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விமான நிலைய நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புயல் எச்சரிக்கை காரணமக வானிலை நிலவரத்தை பொறுத்து விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் அந்தந்த நிறுவனங்களை கேட்டறிந்து பயணத்திற்கான திடமிடலை மேற்கொள்ள வேண்டும். விமானங்கள் ரத்தா அல்லது தாமதமாக இயக்கப்படுமா எனபதை அறிந்து பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் குறைந்ததால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் எந்த நகர்வும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அல்லது நாளை புயலாக மாற உள்ளது.
இந்த புயல் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து பின்னர் தமிழகத்தில் நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும். சென்னையில் இன்று இரவு முதல் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 29ஆம் தேதியான நாளை முதல் 30ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும்.
நாளை (நவ.29) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.