குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அவர்களும் மற்றவர்கள் மாதிரி கல் வீடுகளில் வசதியுடன் வாழ வேண்டும் என்ற இலக்கில் தொடங்கப்பட்டதுதான் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். தொடக்கத்தில் சென்னையில் மட்டுமே இந்த துறை மூலம் வீடுகள் கட்டப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த துறையின் திட்டங்கள் பரந்து விரியத் தொடங்கின. அதனால், பல்லாயிரக் கணக்கான ஏழை குடிசைவாழ் மக்களுக்கு கான்கீரிட் வீடுகள் கிடைத்தன.
குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி அரசு பயணிக்க இந்த துறையே முக்கியமான பணிகளை செய்து வருகிறது. ஆனால், சில ஆண்டுகளாகவே இந்த நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மீது சர்ச்சைகளும் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கியிருக்கின்றன.
தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகள்
சமீபத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்றதாக உள்ளது என்றும் காரை பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றஞ்சாட்டினர். தரமற்ற பொருட்களை கொண்டு கட்டடம் கட்டப்பட்டதாலும், கட்டப்பட்ட பின்னர் முறையான ஆய்வு செய்யாத காரணத்தாலும்தான் வீடுகளில் விரிசல் விடுவது, காரை பெயர்ந்து விழுவது, ஆணி அடித்தாலே சுவர் அசைந்து கொடுப்பது என பல்வேறு பிரச்னைகள் உருவாவதாக சென்னை கே.பி. பார்க், மூலக்கொத்தளம் குடியிருப்பு வாசிகள் அடுக்கடுக்கான புகார்களை வாசிக்கத் தொடங்கினர்.
தொட்டாலே உதிரும் குடியிருப்புகள் – அச்சத்தில் மக்கள்
சென்னை மூலக் கொத்தளத்தில் 138.29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் மக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்ட நகர்புற வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், கையால் தொட்டாலே பெயர்ந்து வரும் அளவிற்கு சிமெண்ட் பூச்சின் நில இருக்கிறது என்றும், பி.வி.சியில் போடப்பட்ட கதவு, சன்னல்கள் உள்ளிட்டவை ஒரு வருடம் கூட தாங்காமல் உடைந்து விழுவதாகவும், மழை பெய்தால் குடிசையில் நீர் வடிவது மாதிரி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளிலும் வழிகிறது என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை புகைப்பட ஆதாரத்தோடு அவர்கள் வெளியிட்டனர்.
அதிகாரிகள் மறுப்பு
ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பூச்சு உதிர்வதாக மக்கள் சொல்வது உண்மையில்லை என்றும், இந்த குடியிருப்புகள் மைவான் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடம் என்றும் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் சொல்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விற்கப்படாமலும் ஒப்படைக்கப்படாமலும் இருக்கும் வீடுகள்
இதுபோன்ற குற்றச்சாடுகள் தொடர்ந்து எழுந்து வருவதால் கட்டப்பட்ட சுமார் 12 ஆயிரம் குடியிருப்பு வீடுகள் விற்கப்படாமலும் பயனாளர்களிடம் ஒப்படைக்க இயலாத நிலையிலும் இருக்கும் நிலையில், இன்னும் குடியிருப்புகள் கட்டுவதற்கு புதிய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாக குறைபாடு காரணமா ?
இதற்கெல்லம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் நிலவும் நிர்வாக குளறுபடிகளும் குழப்பங்களுமே காரணம் என்றும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக, தொழில்நுட்ப பிரிவில் நிலவும் சிக்கல்களும் ஊழல்களும் இந்த பிரச்னைகளுக்கு வித்திடுவதாக கூறும் அந்த துறையின் ஊழியர்கள், பல்வேறு பதவிகள் காலியாக இருப்பதால் கட்டப்படும் கட்டடங்களை ஆய்வு செய்வதில் சிக்கலும் அலட்சியமும் தொடர்வதாக வேதனைப்படுகின்றனர்.
காலியாக இருக்கும் பதவிகள் – காத்துவாங்கும் அலுவலகம்
- தொழில்நுட்ப பிரிவில் தலைமை பொறியாளர் பணியிடத்தில் இரண்டில் ஒன்று காலியாகவும்
- கண்காணிப்பு பொறியாளர் பதவியிடத்தில் மொத்தமுள்ள 7 இடங்களும் காலியாக இருக்கிறது.
- அதே மாதிரி செயற்பொறியாளர்கள் (நிர்வாக பொறியாளர்கள்), பணியிடத்தில் மொத்தமுள்ள 31 இடங்களில் 3 இடங்கள் மட்டுமே நிரப்பட்டு மீதமுள்ள 28 இடங்கள் தொடர்ந்து காலியாகவே இருக்கிறது.
- கட்டுமானங்களின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், கட்டுமான முறை, கட்டுமான தரம் ஆகியவற்றை உறுதி செய்யவேண்டிய செயற்பொறியாளர்கள் பணியிடங்கள் 90% காலியாக உள்ளது.
- கண்காணிப்பு பொறியாளர் பணியிடத்தில் ஒருவர் கூட நியமிக்கப்படாமல் 100% அந்த பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகிறது.
இப்படி கட்டுமானத்தை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள நபர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதால் குடியிருப்புகளை ஆய்வு செய்வதில் சிக்கல் நிலவி, அவை தரமற்று கட்டப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
கூடுதல் பொறுப்பால், கூடுதல் சுமை
செயற்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அதன் கீழ்நிலையில் உள்ள உதவி செயற்பொறியாளர்களே கூடுதல் பொறுப்பு பார்ப்பதும் மொத்தமுள்ள 7 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடங்களையும் டிப்ளமோ மட்டுமே படித்த மூன்றே செயற்பொறியாளர்களே கூடுதல் பொறுப்பாக பார்ப்பதும்தான் இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இப்படி தகுதி குறைவாக உள்ள கீழ்நிலை பொறியாளர்கள் உயர்நிலை பொறியாளர் பணியிடங்களை பொறுப்பேற்று பார்ப்பது பணிவிதி மீறலில் சேரும் என்றும் தெரிகிறது.
கட்டுமான தரம் தாழ்ந்து போக காரணம் என்ன ?
இப்படி மூன்று செயற் பொறியாளர்களே 7 கண்காணிப்பு பொறியாளர் பணிகளை கூடுதலாக கவனித்து வருவதால், நிர்வாக ரீதியில் ஒப்பந்தப் புள்ளி தயாரித்தல், ஒப்பந்தகாரர் நியமனம் போன்றவற்றில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கட்டுமானங்களின் தரம் இதன் காரணமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வாரிய தரப்பு விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
நியமனங்கள் நடைபெறுமா ? வேலை பளு குறையுமா ?
எனவே, தற்பொது பொதுப்பணித்துறையில் இருந்து அயற்பணியில் தலைமை பொறியாளரை நியமித்துள்ளதுபோல, கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் பணியிடங்களுக்கு பொதுப்பணித்துறையில் இருந்தோ அல்லது பிற துறைகளில் இருந்தோ அயற்பணி மூலம் தகுதியுடைய, திறமையான, அனுபவம் மிக்க பொறியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வீட்டு வசதிவாரியத் துறை அமைச்சர் முத்துச்சாமியிடம் விளக்கம் கேட்க, அவரது செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டபோது மொபைல் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரின் விளக்கத்தை பெற முடியவில்லை ; மேலும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் பணியிடங்கள் காலியாக உள்ளது பற்றியும் விளக்கம் கேட்க நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் பிரபாகர் ஐ.ஏ.எஸ் தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.