திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சத்தீஸ்கர் வெள்ளம்:

சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நதிகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

தமிழர் குடும்பம்:

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) என்பவர் கடந்த 15 ஆண்டுகாலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். 

Continues below advertisement

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் வசித்து வந்த நிலையில் திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த மாருதி டிசையர் கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பலியான சோகம்:

காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.