அடுத்த 3 மணி நேரம்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


”1.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி  வருகின்ற  14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.


2. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,


11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 15, மண்டபம் (ராமநாதபுரம்) 14, பாம்பன் (ராமநாதபுரம்) 8, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 6, களக்காடு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), எழுமலை (மதுரை), ஆயிங்குடி (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சிங்கம்புணரி (சிவகங்கை), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 3.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


வங்க கடல் பகுதிகள்: 


14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 


15.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்". இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.