அடுத்த 3 மணி நேரம்


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை, செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


நாளை தெற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 29ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை சூரைக்காற்று வீசும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் வடக்கு அந்தமானை ஒட்டியுள்ள கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


”இன்று (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். 
               
மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,


27.11.2023 முதல் 29.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


30.11.2023 முதல் 03.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 10,  மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 6, 


மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), சோழவரம் (திருவள்ளூர்) 5, மரக்காணம் (விழுப்புரம்), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), மண்டலம் 13 அடையார் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்) தலா 5”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.