இணையத்தாலும்‌ தரவுகளாலும்‌ மக்கள் வழிநடத்தப்படும்‌ புதிய ஊடகச்‌ சூழலில்‌, ஆர்வமுள்ள மாணவர்கள் 6 மாத ஊடகவியல் சான்றிதழ் படிப்பை இலவசமாகப் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 5) கடைசித் தேதி ஆகும். 


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. இளைய தலைமுறையினருக்கு ஊடகவியலின்‌ அடிப்படைகளைப்‌ பயிற்றுவிப்பதில்‌ பாடத்திட்டம்‌ தொடங்குகிறது. தமிழ்நாட்டைக்‌ களமாகக்‌ கொண்டு ஊடகவியலைப்‌ பணியாக மேற்கொள்வதற்கான திறன்களை இந்தப்‌ படிப்பு வழங்குகிறது. 


செய்தி சேகரிக்கும்‌ திறனுடன்‌ துல்லியம்‌, ஆதாரம்‌, அறம்‌, நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும்‌ ஆய்ந்தறிதல்‌ ஆகிய திறன்களையும்‌ வளர்ப்பதாக இந்த 6 மாத கால சான்றிதம்‌ படிப்பு அமையும்‌. திரைத்துறை, விளையாட்டு, மருத்துவம்‌, உணவு, பயணம்‌, அறிவியல்‌, தொழில்நுட்பம்‌ என்று ஊடகவியலின்‌ கிளைகள்‌ விரிந்து பரந்து செல்கின்றன. 


பயிற்சி பட்டறைகள்


இளைய தலைமுறையினர்‌ தங்கள்‌ திறன்களைக்‌ கண்டடையவும்‌ அந்தத்‌ திறன்களில்‌ நிபுணத்துவம்‌ பெறவும்‌ ஏதுவாக இந்தக்‌ கல்வி அமையும்‌. இந்தப்‌ படிப்பின்‌ மூலம்‌, சமூகப்‌ பொறுப்பும்‌ அறச்‌ சிந்தனையும்‌ கொண்ட ஊடகப்‌ பணிக்குத்‌ தகுதி வாய்ந்த ஆளுமைகளை உருவாக்குவதை தமிழ்நாடு அரசு நோக்கமாகக்‌ கொண்டிருக்கிறது. ஊடகவியலில்‌ தாக்கம்‌ செலுத்திய மூத்த செய்தியாளர்கள்‌ வகுப்புகளை நடத்துகிறார்கள்‌. வாரந்தோறும்‌ களப்‌ பயணங்களும்‌ பயிற்சிப்‌ பட்டறைகளும்‌ இடம்பெறுகின்றன.


எழுத்து, ஒளிப்படம்‌, வீடியோ, தொலைக்காட்சி, சமூக ஊடகம்‌, திறன்‌ பேசி, ட்ரோன்‌ இதழியல்‌ உள்பட பல்வேறு ஊடகப்‌ பிரிவுகளில்‌ தக்க துறைசார்‌ நிபுணர்கள்‌ வழியாக மாணவர்கள்‌ திறன்களைப்‌ பெறுவார்கள்‌. கடந்த இரு நூற்றாண்டுகளாக தமிழ்ச்‌ சமூகம்‌ மக்களாட்சிக்கும்‌ தற்சார்பு இதழியலுக்குமான சூழலை உருவாக்கிப்‌ பேணி வளர்ப்பதை மாணவர்கள்‌ உணர்ந்துகொள்வார்கள்‌. தமிழர்கள்‌ என்ற முன்னோடிச்‌ சமூகத்தின்‌ மரபில்‌,
பன்முக இதழியல்‌ கல்வி அனுபவத்துடன்‌ ஊடகப்‌ பணிகளுக்கு ஆயத்தமாவார்கள்‌.


படிப்பின்‌ காலம்‌


இது ஆறு மாத காலப்‌ படிப்பு. திங்கள்‌ கிழமை முதல்‌ வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள்‌ நடைபெறும்‌. காலை 10 மணி முதல்‌ பிற்பகல்‌ 1 மணி வரை வகுப்புகள்‌ இருக்கும்‌. பிற்பகல்‌ 2 மணி முதல்‌ மாலை 5 மணி வரை தனித்திறன்‌ செயல்பாடுகள்‌, பயிற்சிகள்‌, வாசிப்பு, படம்பிடித்தல்‌ முதலியன இடம்பெறும்‌. வாரம்‌ ஒரு முறை களப்‌ பயணம்‌ ஏற்பாடு செய்யப்படும்‌. வாரம்‌ ஒரு முறை பயிற்சிப்‌ பட்டறை நடத்தப்படும்‌.




கட்டணம்‌


கட்டணம்‌ எதுவும்‌ இல்லை. முழுச்‌ செலவையும்‌ தமிழ்நாடு அரசே ஏற்கிறது. வெளியூரைச்‌ சேர்ந்தவர்கள்‌ தங்குமிடம்‌, உணவு, பயணச்‌ செலவை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்‌.


தகுதி


ஏதேனும்‌ ஒரு பட்டப்படிப்பு


வயது


20 முதல்‌ 25 வயது வரை.


சான்றிதழ்‌


தமிழ்நாடு அரசின்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகமும்‌ லயோலா கல்லூரியும்‌ இணைந்து இந்த ஊடகவியல்‌ படிப்புக்கான சான்றிதழை வழங்குகின்றன. தேசிய திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ ஊடக கவுன்சிலும்‌ மாணவர்களை மதிப்பிட்டு சான்றிதழ்‌ வழங்க உள்ளது.


மாணவர்கள் விண்ணப்பிக்க https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 5) கடைசித் தேதி ஆகும்.