டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். தொடர்ந்து, நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “29 மார்ச் 2023 அன்று, நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி/லிக்னைட் விற்பனைக்காக நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான டெண்டரை வெளியிட்டது. சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி கிழக்குப் பகுதிகளில் நிலக்கரி இருப்பு ஏலம் விடுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
2020 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 ஐ நிறைவேற்றியது. இது தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி) ஹைட்ரோகார்பன் எடுப்பதைத் தடை செய்கிறது.
நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட டெண்டரில் ஏலத்திற்கு அழைக்கப்பட்ட இந்த தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ளன. 2011 ஆம் ஆண்டு தி.மு.க அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, மானார்குடியில் இருந்து நிலக்கரி படுகை மீத்தேன் எடுப்பதற்கும், பின்னர் எடுக்கப்பட்டதற்கும் பிறகு, தமிழகத்தின் டெல்டா பகுதியில் நடைபெற்ற பரந்த அளவிலான விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக இச்சட்டம் இயற்றப்பட்டது.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரியின் கிழக்குப் பகுதிகள் நிலக்கரி இருப்புக்களுக்காக ஆய்வு செய்யப்பட்டாலும், நிலத்தடி நீரின் தரத்தை பாதிக்கும் என்பதால், டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் இருந்து நிலக்கரி/ நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதற்கு எதிராக ஒருமனதாக குரல் கொடுத்தனர். டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படலாம். சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலக்கரி ஏல டெண்டரில் இருந்து பிரித்தெடுப்பதற்காக டெண்டர் விடப்பட்ட 3 பிளாக்குகளை தயவுசெய்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என தனது கடிதத்தை நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதி அதை நேரில் சமர்பித்தார்.
இதையடுத்து கடந்த 6ம் தேதி மத்திய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்தார். அதில், 3 லிக்னைட் சுரங்கங்களை 7வது தவணை ஏலத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெங்களூருவில் அண்ணாமலை என்னை வந்து சந்தித்தார்.
கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்விலும், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நிலக்கரி ஏலத்தில் இருந்து விலக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.” என பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு நன்றி தெரிவித்தார்.