திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவண பாலகுருசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ் மற்றும் தங்கபாண்டி ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்,மனுதாரர் தரப்பில், தான் லஞ்சம் தரவில்லை என்பதால், அழகர்சாமி மற்றும் நாகராஜன் இருவரிடமும் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனது செல்போனை பறிமுதல் செய்து, சட்டவிரோத காவலில் காவல்துறையினர் வைத்திருந்ததாகவும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்" என்றும் வாதிடப்பட்டது.அரசுத்தரப்பில், காவல்நிலைய சிசிடிவி பதிவுகள் 30 நாட்களுக்கு மேலாக தானே அழியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதால், தற்போது அதனை ஆராய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதே சமயம் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் பாதுகாக்கப்படுவதை தமிழக உள்துறை செயலரும், தமிழக காவல்துறை தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும். சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

 

 



ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் தொடர்ந்த வழக்கு - மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு






 

மாற்றுப்பணிக்கு சென்ற ஆசிரியைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை நகர் அனைத்து மகளிர் போலீஸார், ஜோசப் ஜெயசீலன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜோசப் ஜெயசீலன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.அதில், "சுந்தரம்மாள் பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியர்களின் பதவி உயர்வை அங்கீகரிக்க வட்டார கல்வி அலுவலர் லஞ்சம் கேட்டார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன்.

 

இதனால் எங்கள் பள்ளி மீது கடும் கோபத்தில் இருந்த வட்டார கல்வி அலுவலர் மாற்று பணிக்காக வந்த இரு ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த அறிக்கை அடிப்படையில் இருவரின் மாற்றுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.  இதை ரத்து செய்யக்கோரி நான் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது என் மீது ஆசிரியைகள் பாலியல் புகார் தெரிவித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் பேரில் போலீஸார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்"என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர் வழக்கு தொடர்பாக மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 



அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது. பதவி உயர்வு அடிப்படை உரிமைகளில் ஒன்று தான்

 

மதுரை வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தகுதியான மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக்குழு முடிவு செய்யும். மத்திய ஆய்வுக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்டால் எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்திருக்கும். எனவே, ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதற்காக மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார். 

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது. பதவி உயர்வு அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். அதே நேரத்தில் பதவி உயர்வுக்கான தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும். பதவிக்கு உயர்வுக்கு தகுதியானவர்களாக இருந்தாலும் தனக்கு பதவி உயர்வு வழங்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்த முடியாது.

 

மனுதாரர் தற்போது மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிகிறார். மத்திய ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்திருக்கும் என மனுதாரர் கூறியுள்ளார். இது இயற்கையில் கற்பனையானது. எதிர்கால நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது.இந்த வழக்கில் மத்திய அரசின் சீராய்வுக்குழு கூட்டம் உரிய காலத்தில் நடைபெறவில்லை. ஐஏஎஸ் பதவி உயர்வு தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவில் கூறியுள்ளார்.