சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15ஆம் தேதி) தொடங்கியுள்ள நிலையில், தேர்வு அறைக்குள் சாட் ஜிபிடி (ChatGPT), மொபைல் போன் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


சிபிஎஸ்இ வாரியத் தேர்வு அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத 38,83,710 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 


நாடு முழுவதும் 7250 தேர்வு மையங்களிலும், 26 வெளிநாட்டு மையங்களிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஒட்டுமொத்தமாக 16 நாட்களுக்கு நடத்தப்பட்டு மார்ச் 21ஆம் தேதி முடிவடைய உள்ளன. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் 36 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளன. அதன்படி இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி அன்று முடிவடைகின்றன.


திறன் அடிப்படையில் தேர்வுகள்


10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் கொள்குறி வகை, பதிலை உருவாக்கும் வகை, அசர்ஷன் வகை, ரீசனிங் மற்றும் சம்பவத்துக்கு ஏற்ற முடிவு (objective type, constructing response type, assertion and reasoning and case based format) ஆகிய பல்வேறு வடிவங்களில் கேள்விகள் இருக்கும். 


2022- 23ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 40 சதவீதக் கேள்விகளும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 30 சதவீதக் கேள்விகளும் திறன் அடிப்படையில் அமைய உள்ளன. 
10ஆம் வகுப்புத் தேர்வு 76 பாடங்களுக்கும் 12ஆம் வகுப்புத் தேர்வு 115 பாடங்களுக்கும் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் தேர்வு அறைக்குள் சாட் ஜிபிடி (ChatGPT), மொபைல் போன் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாரியக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்கள் தேர்வு அறைக்குள் மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவற்றுள் சாட் ஜிபிடி (Chat Generative Pre-trained Transformer) மொபைல் போன் உள்ளிட்டவை அடக்கம்.  அதை மீறி சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றால், Unfair Means (UFM) என்ற வகைமையின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் போலி செய்திகளையும் வீடியோக்களையும் நம்ப வேண்டாம். வதந்திகளைப் பரப்பவும் வேண்டாம். அவ்வாறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார். 


சாட் ஜிபிடி என்றால் என்ன?


பேச்சு, பாடல்கள், கட்டுரைகள் என நாம் கேட்பவை அனைத்தையும் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது சாட் ஜிபிடி. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.


மாநில வாரியத் தேர்வுகள் எப்போது?


தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் சார்பில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.


மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.