மடப்புரம் அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் மூலம், அவர் பொய் புகார் கொடுத்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொய் புகார் என சிபிஐ அதிகாரிகள் முடிவு
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரர், நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையின்படி, ஜூன் 27-ம் தேதி கோவிலுக்கு வந்த நிகிதா, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஜித்குமாரிடம் தனது காரை பார்க் செய்து தருமாறு கூறி, சாவியை கொடுத்துள்ளார். அவரும் அந்த சாவியை வாங்கி, அருகில் இருந்த ஆட்டோ ட்ரைவர் அருணிடம் கொடுத்து, காரை கோவில் எதிரில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, 2 நிமிடங்களில் சாவியை மீண்டும் நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்துள்ளார்.
ஆனால், நிகிதா கொடுதத புகாரில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்தே அஜித்குமார் கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அதோடு, காரை, அஜித்குமாரும் அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருணும் சேர்ந்து, வடகரை வரை ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. அதனால், சிபிஐ அதிகாரிகள், தங்களது முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்தே தொடங்கினர்.
அப்போது, வடகரைக்கு வரும் வழியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோது, கார் வந்துபோனதாக தெரியவில்லை. இதில் மற்றொரு திருப்பமாக, காரை நிகிதாவே ஓட்டிச் சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
அதேபோல், நிகிதாவின் காரை, மடப்புரம் கோவில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, இரண்டு நிமிடங்களில் சாவியை மீண்டும் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்னர், பார்க்கிங்கிலிருந்து 8 நிமிடங்களில் மீண்டும் காரை எடுதது வந்து கொடுத்துள்னர். அதனால், கோவிலுக்கு நிகிதா காரில் வந்த பின்பு, அங்கிருந்து கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெளிவானது.
இப்படி முரண்பட்ட தகவல்களை, விசாரணையின்போது சிபிஐ அதிகாரிகளிடம் நிகிதா தெரிவித்ததையடுத்து, அஜித்குமார் மீது அவர் பொய் புகாரையே அளித்துள்ளதாக, சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார், நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, சிறப்பு தனிப்படையைச் சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிகிதாவிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு பின்பு வெளியான தகவலால், இப்படி, ஒரு பொய்ப் புகாருக்காகவா ஒரு அப்பாவி இளைஞனை காவலர்கள் அடித்துக் கொன்றார்கள் என்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.