தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாமல் முரண்டுபிடிப்பதால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையில் வாடி வருகின்றனர். பாய்ச்ச போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து கருகத் தொடங்கியிருக்கின்றன.



வாடும் பயிர்கள்


கானல் நீராய் போன காவிரி நீர்?


காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை மட்டுமே பிராதனமாக கொண்டு இந்த குறுவை சாகுபடி செய்யப்படுவதால், இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து விரக்தியில் உள்ளனர்.


திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டாலும், கர்நாடகா தரும் நீரின் அளவை குறைத்ததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் காய்ந்து வீணாகும் நிலையில் உள்ளது. இதனால், நடவுக்கு செலவு செய்த தொகையை கூட மீண்டும் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் அச்சமும் டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.


தமிழ்நாட்டிற்கும்  - கர்நாடகாவிற்கு இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதனை சரி செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், போதிய நீர் இல்லை, கர்நாடக மாநிலத்தில் குடிநீருக்கே பற்றாக்குறை என்ற பல்வேறு காரணங்களை அடுக்கி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் அம்மாநில அரசு பாரப்பட்சம் காட்டி வருகிறது.



மேட்டூர் அணை


பங்கீட்டு நீரை தர மறுக்கும் கர்நாடகா


இந்நிலையில், நடப்பாண்டிற்கான பங்கீட்டு தண்ணீரை கர்நாடகம் தர மறுத்து வருவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் ஒரு புதிய மனு கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களை காக்கும் விதமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மீதமிருக்கும் நாட்கள் வரை 24 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட ஆணையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி செப்டெம்பர் மாத நீரின் அளவான 36.76 டி.எம்.சி தண்ணீரையும் திறந்துவிட வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைபோன்றே நிர்ணயிக்கப்பட்ட மாதங்களான நீரையும் முறையாக வழங்கவேண்டும் என தீர்ப்பளிக்க வேண்டும் என கூறியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


புதிய அமர்வு அமைத்த தலைமை நீதிபதி


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னர் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைப்பதாகவும் அவர்கள் இந்த வழக்கை விசாரித்து உத்தரவிடுவார்கள் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதன்படி, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.


நாளை விசாரணைக்கு வரும் காவிரி வழக்கு


நாளை (ஆகஸ்ட் 25ஆம் தேதி) விசாரணைக்கு வரவுள்ள காவிரி வழக்கில், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நீதிபதிகள் வழங்குவார்கள் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், வாதங்களோடு பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்களையும் நீதிபதிகளிடம் காட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


57வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள காவிரி விவகாரத்தில் நாளை உச்சநீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு இரண்டு மாநில விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.