காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கொடுத்து நிலைமையை எடுத்துக்கூறினேன். அவரும் இரண்டு ஒரு நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளேன். எனது நம்பிக்கை பலன் கொடுக்குமானால், தஞ்சை தரணியில் பயிர்கள் காக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல், காவிரி விவகாரம் குறித்து கர்நாடகவுடன் நேரடி பேச்சு வார்த்தை பேசக்கூடாது. நடுவர் மன்றம் தான் சரி. முதலமைச்சர் பிரதமருக்குத்தான் கடிதம் எழுதுவார், ஆனால் நிலமையை கருத்தில் கொண்டு நீர்வளத்துறைக்கே எழுதியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து மணிப்பூர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர், பிரதமர் வாய் திறந்தால் மட்டும் போதாது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் கலவரம் இன்று நேற்றா நடைபெற்று வருகிறது. சென்னையை விடவும் மிகவும் சிறிய மாநிலம். அங்கு நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்தியிருந்தால் இந்த கேவலம் நடந்திருக்காது எனக் கூறினார்.
இதற்கு முன்னர், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனுமதி வழங்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா மாநிலத்தில் இன்னும் பெய்யவில்லை. அதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது.
மேலும், பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க இயலாது. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. கர்நாடக அரசு இத்தகையான செயல்களை செய்யக்கூடாது எனவும், இதை தடுக்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக காவிரியில் திறந்துவிடவில்லை. ” என குறிப்பிடப்பட்டு இருந்தது.