காவிரி விவகாரத்தில் கூடுதல் நீர் திறக்கக் கோரிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், தமிழக அரசு அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தீராத பிரச்னை:
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. நமக்கான உரிமையையே ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
அடுத்தடுத்த சந்திப்புகளும், கூட்டங்களும்:
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லி சென்று, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை தனித்தனியே சந்தித்தனர். இதனிடையே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசும், 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உச்சநீதிமன்றம் அதிரடி:
இருமாநில அரசுகளின் மனுக்களும் நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்கள் மீது தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதாவது தமிழக அரசு சார்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரியது நிராகரிக்கப்பட்டது. மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு தற்போது திறக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?
எதிர்பார்த்த அளவிலான தண்ணீர் திறக்கப்படாததால் காவிரியின் கடைமடையை சேர்ந்த விவசாயப் பயிர்கள் கருகும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க, தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து, அதன் வாயிலாக கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீரைப் பெற ஏதேனும் வாய்ப்புள்ளதா என ஆலோசிக்கப்படலாம். அதேநேரம், இனி இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை என்பதே கிடையாது என, அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், இனி காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அல்லது அரசியல் நடவடிக்கையால் மட்டுமே தமிழகத்திற்கு சாதகமான தீர்வை எட்ட முடியும். எனவே, I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் கட்சிக்கு காவிரி விவகாரத்தில் நேரடியாக அழுத்தம் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.