விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே கால்நடைகளுக்கு முறையாக தண்ணீர் அளிக்க வேண்டுமென கால்நடை பராமரிப்புத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
கால்நடைகள் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதிய வேளையில் சாலையில் வீசும் அனல் காற்றினால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் வாடி, வதங்கி வருகின்றனர். கோடையின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல மாவட்டங்களில் வெயில், சதத்தை கடந்து விட்டது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தினாலும், கடும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்ப்பதிலும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில விவசாயிகள், தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நீரும், தீவனமும் கொடுக்க முடியாமல் ஏரிகளிலும், வயல்வெளி பகுதிகளிலும், வனங்களிலும் கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விட்டுவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்யும் காலத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில் தான் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சிரமத்தை சந்திக்கும் விவசாயிகள்
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இங்கு கால்நடை வளர்ப்பை விவசாயிகள், பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் மாடுகள், ஆடுகள், கோழிகள் போன்ற கால்நடை வளர்ப்பு பராமரிப்பாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனை நம்பியே இவர்களுடைய வாழ்வாதாரம் இருக்கின்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடை வளர்ப்பு தொழிலை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீர்ச்சத்து குறைபாடு ,செரிமானக்கோளாறு
கோடை காலம் தொடங்கியுள்ளதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைப்பதில்லை. இதனால் கால்நடைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமானக்கோளாறு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பால் உற்பத்தி குறைபாடு
மேலும் வெயிலின் தாக்கத்தால் மாடுகளில் பால் உற்பத்தி குறைபாடு, சினை உருவாக்கம் குறைபாடு, ஆடுகள் மேய்ச்சலின்மை, கோழிகள் திடீர் உயிரிழப்பு போன்ற எண்ணற்ற சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்கள் மிகவும் கவலையடைந்து வருகின்றனர். எனவே இதற்கு கால்நடை பராமரிப்புத்துறையினர் தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி கூறியதாவது:-
கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப்போல கால்நடைகளையும் அதிகமாக பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். கோடைகாலங்களில் சூரியக் கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் மண்டல வெப்பநிலை ஆகிய அனைத்தையும் பொறுத்தே கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதிகமான வெப்பக்காலங்களில் கால்நடைகள் உணவு உட்கொள்ளுதல், கால்நடைகளின் வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி 20 சதவீதம் குறையும். கால்நடைகள் சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். சினை பிடித்தலும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும்
வெயில் காலத்தில் உணவு உட்கொள்ளுதலும் பாதியாக குறையும், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும். எருமை மாடுகளில் பசுக்களைவிட வேர்வை நாளங்கள் குறைவாக உள்ளதால் எருமைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எருமை மாட்டின் தோல் கருப்பாக இருப்பதால் சூரிய கதிர்வீச்சு அதிகமாக தாக்கும். எருமையின் சினைப் பருவகால அறிகுறிகள் முழுமையாக தென்படாது. பருவத்துக்கு வரும் காலமும் குறையும். ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திறன் குறையும். கோடையில் கோழிகள் உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்புகளும் அதிகம். கோழிகள் வெப்பத்தை தாங்க முடியாமல் வாய் வழியாக மூச்சுவிடும். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும். முறையான பராமரிப்பு இல்லாமல் போனால் அதிகமான கோழிகள் இறப்பினை சந்திக்கக்கூடும்.
கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது
ஆகவே கோடை காலங்களில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கக்கூடாது. அவற்றின் உடலில் பல உறுப்புகள் இயங்குவதால், அதன் வாயிலாக வெளிப்படும் கழிவுப்பொருட்கள் தோல், சிறுநீரகம், நுரையீரல் வழியாக திரவ நிலையிலேயே வெளியாகும். எனவே அதன் உடலில் வெப்பநிலை சீராக இருக்க தண்ணீர் அவசியம். அதேபோல் உள்ளுறுப்புகள் மற்றும் வெளியுறுப்புகள் சுத்தமாக வைத்துக்கொள்ள தண்ணீர் உதவுகிறது. அதுமட்டுமின்றி உணவை அசை போடவும், இரையை விழுங்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கால்நடைகளின் தண்ணீர் தேவையை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்ய விவசாயிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கறவை மாடுகளுக்கு 4 அல்லது 5 முறை தண்ணீர் அளிக்க வேண்டும்
கால்நடைகளின் தண்ணீர் குடிக்கும் அளவு குறையும்போது, செரிமானத்தன்மை சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், கறவை மாடுகளுக்கு 4 அல்லது 5 முறை தண்ணீர் அளிக்க வேண்டும். இதனை விவசாயிகள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் கால்நடைகளை கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.