சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க முடியாது என்றும் அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சாதி மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்க கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும்,அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், எனவே சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் , சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சாதி மத மற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டக்குரியது என தெரிவித்தார். அதேவேளையில் இதுபோல் வழங்கினால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய சான்றிதழை வழங்குவது, சொத்து வாரிசுரிமை மற்றும் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க
Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் வரவேற்பு