பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதி தீ போல் பரவிவருவதன் விளைவை அண்மையில் நடந்த நெல்லை சம்பவம் உணர்த்தியது.


நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் செல்வ சூர்யா (17). இவர், அங்குள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில் சாதி கயிறு கட்டுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அதே பள்ளியல் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்களால் தாக்கப்பட்டார். இதில் செல்வ சூர்யா உயிரிழந்தார். இதையடுத்து மூன்று மாணவர்களையும் போலீஸார் கைது செய்தனர். மூன்று பேரும் தற்போது சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் எனவே ஆசிரியர்கள் மற்றும் தனது மகனை கொலை செய்த மூன்று மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த மாணவணின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


இந்நிலையில் தான் சாதி கயிறு தொடர்பான அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் சார்பில் தெளிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.


அதில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாக தெரிய வருகிறது. இதனால் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்திலும் அனைவரோடும் கலந்து பழகாமல் குழுக்களாக இயங்கும் சூழல் உருவாகியுள்ளது.


எனவே மாணவர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இது போன்று சாதிக் குழுக்களாகப் பிரிவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும் போது எடுத்துக் கூறிடுமாறு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்திடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 


மாணவர்கள் சாதி அடையாளமாக வண்ண வண்ண கயிறுகளை அணிவதைத் தடுக்குமாறு அனைத்துவகை பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், காவி நிறக் கயிறுகளை அணிந்து சாதி அடையாளங்களை வெளிப்படுத்துவதாக 2018 பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.


நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி போன்ற தென் மாவட்டங்களிலேயே பள்ளிகளில் இதுபோன்ற சாதிக் கயிறு சர்ச்சை அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.