Governor RN Ravi:  தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி, ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.


தமிழக அரசின் ரிட் மனு:


சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை:


இதுதொடர்பாக கடந்த 6ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வின் முன், தமிழ்நாடு அரசு சாபில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகி சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன்படி, “தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரும் ரிட் மனு நவம்பர் 10ம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்படுள்ளது. அதில் மாற்றம் ஏதும் செய்யக்கூடாது. அதேநேரம், சென்னை பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் ஆளுநரின் அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான ரிட் மனுவையும் சேர்த்து ஒரே நாளில் விசாரிக்க வேண்டும்” என முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டது.


இன்று விசாரணை:


இந்நிலையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, இரண்டு ரிட் மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. கேரளா ஆளுநருக்கு அதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன?


அரசின் செயல்பாட்டிற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருப்பதாக, ஏற்கனவே பஞ்சாப் அரசும் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தது. அப்போது,  ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மாநில அரசுகள் வரும் நிலையை ஆளுநர்கள் உருவாக்கி இருப்பது கவலைக்குரியது. மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர்கள் ஆய்வு செய்யலாம். ஆனால் உச்சநீதிமன்றத்துக்கு வரும் முன்னரே ஒப்புதல் தந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. தெலங்கானா அரசும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.