சென்னையில் அதிமுகவினர் 10பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தொற்றுநோய் தடுப்புச் சட்டம் ,சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வின் ஆதிராஜாராம் மற்றும் முன்னாள் எம்.பி., வெங்கடேசன் உட்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு புகாரில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் அவர் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் விடுதி உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுதவிர கோவையில் வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம்,  சாலைமறியல் மற்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அடக்கம். 

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை புகார் பதிவு செய்து அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் தற்போது ரெய்டு நடத்தப்பட்டது. தன்னை சார்ந்தவர்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் ரூ. 463 கோடி அளவிலான டெண்டர்கள் ஒதுக்கீடு மற்றும் கோவை மாநகராட்சியில் ரூ. 342 கோடி அளவில் டெண்டர் ஒதுக்கீடு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது சகோதரர் உட்பட தன்னை சார்ந்து இயங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு  டெண்டர் விடுத்ததில் முறைகேடு செய்ததாக 2018ல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி தரப்பு புகார் அளித்தது.


எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் 11 மணி நேர சோதனை - ஒரு முழு ரிப்போர்ட்..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டர். நேரம் ஆக ஆக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் ஆகிய 8 அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் முகாமிட்டனர். இந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வப்போது அதிமுக தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த வைத்த தடுப்பினை அதிமுகவினர் தூக்கி வீசினர். இத்தகைய செயல்களால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. 

வடவள்ளி பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே நெஞ்சு வலி காரணமாக சந்திர பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். சந்திரசேகர் வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல் துறை தடுப்புகளை தள்ளி விட்டு சென்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்தது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரம் நடந்த சோதனையில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர். இதேபோல மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லத்தில் நடந்த 7 மணி நேர கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர்.