அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்ததாக 2018 ம் ஆண்டில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணி இல்லம், அவரது சகோதரர் அன்பரசன் இல்லம் உள்ளிட்ட 42 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.




கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையை துவக்கினர். 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பாக திரண்டர். நேரம் ஆக ஆக தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. 300 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டதால், 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.




கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் ஆகிய 8 அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் முகாமிட்டனர். இந்த சோதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார். 




லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வப்போது அதிமுக தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த வைத்த தடுப்பினை அதிமுகவினர் தூக்கி வீசினர். இத்தகைய செயல்களால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.




வடவள்ளி பகுதியில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே நெஞ்சு வலி காரணமாக சந்திர பிரகாஷ் தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். சந்திரசேகர் வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் காவல் துறை தடுப்புகளை தள்ளி விட்டு சென்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.




தொடர்ந்து போராட்டம் செய்வதும், சற்று நேரம் ஓய்வும் என அதிமுக தொண்டர்களின் போராட்டம் நடந்தது. அவர்களுக்கு அவ்வப்போது தேநீர், குளிர்பானம், பிஸ்கட், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. உணவு விநியோகம் குறித்து செய்திகள் வெளியானதால், செய்தியாளர்களுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்தியாளர்களை தாக்க முயன்ற அதிமுக தொண்டர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவடைந்தது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரம் நடந்த சோதனையில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர். இதேபோல மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லத்தில் நடந்த 7 மணி நேர கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர்.




இதனிடையே லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் 13 லட்ச ரூபாய் பணம், ஆவணங்கள், பத்திரங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.