கடலூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகியை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

விறுவிறுப்பாக செயல்படும் நா.த.க

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சி மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறது. அக்கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கட்சி சார்பில் நடக்கும் போராட்டங்கள் தவிர்த்து, மக்கள் சார்பில் நடக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். 

விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சி

அப்படியாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நேற்று (டிசம்பர் 15) தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. தங்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடந்த நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக சீமான் பங்கேற்றார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அரசு பணியாளர் சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

Continues below advertisement

இந்த நிகழ்ச்சி நடந்து முடியும் வரை எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. தொடர்ந்து மீண்டும் தனது காரில் ஏறி புறப்பட சீமான் தயாரானார். அப்போது விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான ரங்கநாதன் என்பவர், சீமானை வழிமறித்து, சீமான் ஒழிக என கோஷமிட்டதோடு, அவர் மேடையில் பேசிய கருத்துகளை விமர்சித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சீமானின் ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் என அனைவரும் ரங்கநாதனை சூழ்ந்துக் கொண்டு அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

தொடர்ந்து சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது. இப்படியான நிலையில் ரங்கநாதனை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேசமயம் ரங்கநாதனை கைது செய்யக்கோரி உடனடியாக விருத்தச்சலம் காவல் நிலையத்தில் நா.த.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் சீமான் தன்னை தாக்கியதாக திமுக பிரமுகரான ரங்கநாதனும் புகார் அளித்தார். இதற்கிடையில் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொலை மிரட்டல், அவதூறாக பேசி தாக்குதல் போன்ற பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் ரங்கநாதன் மீது இரு பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் காரணமாக விருத்தாச்சலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.