தமிழ்நாடு அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த உள் ஒதுக்கீட்டை எதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கியது மூலம் பொதுப்பிரிவில் தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,”இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர். இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது” என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31%ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு, “பொதுப்பிரிவினருக்கான வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் தான் 7.5% வழங்கப்பட்டுள்ளது. தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது” எனக் கூறியது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது என்று பள்ளி கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது என்று அரசு உதவிபெறும் பள்ளிகள் சார்பில் வாதாடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரிய மசோதா தற்போது மீண்டும் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீட் விலக்கு மசோதாவை விரைவில் குடியரசுத்தலைவரிடம் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். ஆளுநர் தரப்பிலும் இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்