Car Flood Insurance Claim: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


சென்னையை ஸ்தம்பிக்க வைத்த பெருமழை:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. 


தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனிடயே, பல இடங்களில் கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இருசக்கர வாகனங்களும் நீரில் மூழ்கின. வாகனங்களை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக பல இடங்களில் கார்களை சாலைகளில் உள்ள செண்டர் மீடியன் பகுதியிலும், நடைபாதையிலும் மற்றும் மேம்பாலங்கள் மீதும் நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் இன்சூரன்ஸ் பணத்தை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் பணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?  



  • வாகனத்தை ஸ்டார்ட் செய்யாதீர்கள்:


வெள்ளத்தில் மூழ்கி உங்களது கார் பாதிக்கப்பட்டு இருந்தால், இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள். அது உங்களது காரின் பாதிப்பை மேலும் அதிகரிப்பதோடு, காப்பிட்டு தொகையை பெற முடியாத சூழலையும் ஏற்படுத்தலாம்.



  • காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவியுங்கள்:


பாதிப்பினை அறிந்த உடன் முடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியமாகும். எவ்வளவு சீக்கிரம் தகவல் தெரிவிக்கிறோமோ அவ்வளவு விரைவாக உரிமை கோரல் செயல்முறையைத் தொடங்கலாம். தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது நேரில் சென்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.



  • காவல்துறையில் புகார் அளியுங்கள்:


உங்கள் கார் வெள்ளத்தில் சேதமடைந்தாலோ அல்லது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாலோ காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்வது நல்லது. இது உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு சேதத்தை மதிப்பிட உதவும், மேலும் காவல் துறையால் வாகனம் கண்டுபிடிக்கப்படாவிட்டால் மொத்த இழப்பிற்கான உரிமைகோரலை தாக்கல் செய்ய உதவிகரமாக இருக்கும்.



  • அனைத்து ஆவணங்களையும் சேகரியுங்கள்:


காரின் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டுக் கொள்கை மற்றும் சேதத்தின் அளவைக் காட்டும் மற்ற ஆவணங்கள் ஆகியவற்றை தயார்படுத்திக் கொள்ளுங்கள். சேதத்தின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து வைப்பது நல்லது. முடிந்தவரை சேதத்தை துல்லியமாகவும் விரிவாகவும் விவரிக்க வேண்டும்.



  • காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து சேதத்தை மதிப்பிடுங்கள்:


காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் உங்கள் காரின் சேதத்தை மதிப்பிடுவார். தேவைப்பட்டால்  வாகனத்தை பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்று, சேதத்தை தீர்மானிக்க முடிவு செய்வார். அங்கு தரும் மதிப்பீட்டின்படி,  சேதத்தின் அளவையும் பழுதுபார்க்கும் செலவையும் தீர்மானிப்பார்கள். அதனடிப்படையில், அவர்கள் உங்களுக்கு க்ளைம் தொகையை வழங்குவார்கள். இந்த தொகை குறித்து உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.



  • தொகையை பெறுங்கள்:


காப்பீட்டு நிறுவனம் வழங்குவதாக கூறிய தொகையை நீங்கள் ஒப்புக்கொண்டவுடன், உங்கள் காப்பீட்டு நிறுவனம் உங்களுக்குப் பணம் செலுத்தும். இது மொத்தத் தொகையாக இருக்கலாம் அல்லது தவணை முறையில் செலுத்தப்படலாம்.


 

Car loan Information:

Calculate Car Loan EMI