தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் பணியில் சேர முறையான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கடந்த 2020-2021ஆம் ஆண்டில் ஆவினில் விதிகளை முறையாக பின்பற்றாமல், பணியிடங்கள் காலியாக இல்லாத நிலையிலும் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் முறைகேடாக நேரடி நியமனங்கள் மூலம் பணியில் சேர்ந்த 170 பேரை பணிநீக்கம் செய்து ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். 


2020-2021-ஆம் ஆண்டில் வழிகாட்டுதலை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட புகாரில் ஊழியர்கள் 170 பேரை ஆவின் பணிநீக்கம் செய்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு சுமார் 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆவின் மீண்டும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


மதுரை


மதுரை ஆவினில் கடந்த 2020, 2021ல் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மேலாளர், உதவி பொது மேலாளர், எஸ்.எப்.ஏ., உட்பட 61 பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட்டன. இதில் விண்ணப்பிக்காமல் நேரடி தேர்வு, வங்கி டி.டி., மாற்றி விண்ணப்பித்தது, தகுதியுள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது.


இதை அடுத்து, மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின் நியமனங்களில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு, அவர்களை அப்பணியில் இருந்து நீக்க கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு, பால்வளம் துணைப் பதிவாளர் தலைமையில் விசாரணை நடந்தது.  இதுதொடர்பான அறிக்கை கமிஷனர் சுப்பையனுக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து பால்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, " மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி பணி நியமனங்கள் குறித்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 81-ன் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, துணைப்பதிவாளர்(பால்வளம்)கடிதத்தின் மூலம் விசாரணை அறிக்கை பெறப்பட்டுள்ளது.


மேற்படி விசாரணை அறிக்கையில் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் மேலாளர் (நிர்வாகம்), காயத்ரி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் ஆணையர் அவர்களின் பணிநிலைத்திறன் பட்டியல் அங்கீகரித்துப் பெறப்படாமலும், இனச்சுழற்சி முறை பின்பற்றப்படாததும், நிர்வாக நடைமுறை விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாலும், அப்பணி நியமனங்களை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


எனவே, மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நேரடி பணிநியமனங்களையும் ரத்து செய்து ஆணையிடுமாறு பொது மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலாளர் (நிர்வாகம்) காயத்ரி அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை தொடரவும்” உத்தரவிடப்பட்டுள்ளது.