VIJAY CAA TVK: சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்புடையதல்ல என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


”சிஏஏ ஏற்புடையதல்ல”


இதுதொடர்பான அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என விஜய் வலியுறுத்தியுள்ளார்.






விஜயின் அரசியல் நிலைப்பாடு:


அரசியலில் நுழைவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிறகு, மக்கள் பிரச்னை குறித்து பெரிதும் கருத்து ஏதும் தெரிவிக்காமலே விஜய் இருந்தார். அதேநேரம், அண்மையில் அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுதி மொழி வெளியிடப்பட்டது. அதில், ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி. மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்” என குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, மத்திய அரசின் சிஏஏ சட்டம் ஏற்புடையதல்ல என, விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது முதல் அரசியல் அறிக்கையே மத்திய அரசின், சிஏஏ திட்டத்திற்கு எதிராக நடிகர் விஜய் வெளியிட்டு இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என, மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முதலமைச்சர் கண்டனம்:


குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.