சேலம் மாநகர் கோட்டை பகுதியில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி வித்தியாசமான முறையில் விற்பனைக்கு சலுகைகளும், திரைபிரபலங்களை அழைத்து வந்தும், விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வகையில் "தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்" என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று 350 ரூபாய் விலை உள்ள ஹெல்மெட் ஒன்று வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற வித்தியாசமான முறையில் விற்பனை செய்து வருகிறார். இந்த விற்பனையை திரைப்பட நடிகர் திருப்பாச்சி புகழ் பெஞ்சமின் துவக்கி வைத்தார். சாலையில் நாளுக்குநாள் சாலை விபத்துக்கள் ஏற்படும் நிலையில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கு முன்பாக வெங்காயம், பெட்ரோல் உள்ளிட்டவைகளில் விலை உயர்ந்த போது அதனை இலவசமாக வழங்கி ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். வித்தியாசமான முறையில் ஹெல்மெட் விற்பனை நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை தந்து ஹெல்மெட்டுகளை வாங்கி செல்கின்றனர்.
இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறுகையில், "தலைக்கவசம், உயிர்க்கவசம்" அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு முறையும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம். இந்த முறை தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சலுகையை கொடுத்து வருகிறோம். ஹெல்மெட் அணியாமல் செல்வதினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார். இதன்படி இன்று ரூ. 349 மதிப்பிலான ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கி வருகிறோம். இதற்கு முன்பாக சிக்னல்களில் இலவசமாக ஹெல்மெட் வழங்கினோம். ஆனால், இலவசம் என்பதினால் மக்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் ஒரு பொருள் கொடுப்பதினால் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்" என்றார்.
இது தொடர்பாக ஹெல்மெட் கடையில் உரிமையாளர் முகமது காசிம் இடம் கேட்டபோது, தக்காளியை இலவசமாக வழங்குவதற்கு முக்கிய காரணம் "விவசாயத்தை காப்போம்" என்பதால் தான். விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் இதனால் அதனை மையமாகக் கொண்டு தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறேன். அதுமட்டுமின்றி தலைக்கவசம் அனைவரும் அணிய வேண்டும். தங்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது தங்கம் போல தக்காளி விற்பனையாகி வருகிறது. இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு இந்த சலுகையை வழங்க உள்ளோம். சேலம் மாவட்ட பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள, தங்களின் பொன்னான உயிரை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.