தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும், பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு சட்டமன்ற ஆலோசனைக்குழு மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த குழுவினர் அளித்த பரிந்துரையின்படி, தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி, மாநிலம் முழுவதும் இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட உள்ளது. இதுதவிர, போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு அமலில் உள்ளதாலும் வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று (22.05.2021) மற்றும் நாளை (23.05.2021) தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஒரு வார முழு ஊரடங்கு காரணமாக, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் பல்வேறு சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சேவைகள் செயல்பட நாளை அனுமதிக்கப்பட்டாலும், மிகப்பெரிய வணிக நிறுவனங்களான மால்கள் செயல்பட தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படவில்லை.