பக்கிங்காம் கால்வாய் திட்டத்திற்கு நிதி- மத்திய அரசு சொன்னது என்ன?
தேசிய நீர்வழிப் பாதைகள் 4-ன் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும் நிதியாண்டு 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்திற்கு மொத்தம் ரூ.19.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

பக்கிங்காம் கால்வாய் (Buckingham Canal) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் இயங்கும் ஒரு செயற்கை நீர்வழி ஆகும். இந்த கால்வாயானது,ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகள் வழியாக செல்கிறது. இதன் நீளமானது,சுமார் 800 கி.மீ. நீளமுடையது என்றும் கூறப்படுகிறது.
இன்றைய நிலையில், இது பெரும்பாலும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது என்றும் மேலும் பல பகுதிகளில் மாசுபட்டும்,காணப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அரசு மற்றும் சில அமைப்புகள் இதனை மறுசீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தருணத்தில், மத்திய அமைச்சர் சர்பானாந்த சோனாவால் தெரிவித்ததாவது, “ தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பக்கிங்காம் கால்வாய் மேம்பாட்டு திட்டம் தேசிய நீர்வழிப் பாதைகள் 4-ன் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும் நிதியாண்டு 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்திற்கு மொத்தம் ரூ.19.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானாந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மடில குருமூர்த்தி எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த அமைச்சர், பக்கிங்காம் கால்வாயின் பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சரக்கு போக்குவரத்து மற்றும் படகு சுற்றுலா பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு கோரியதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெடகஞ்சம் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை) 316 கிமீ தூரத்தையும் தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மரக்காணம் வரை) 110 கிமீ தூரத்தையும் உள்ளடக்கிய தேசிய நீர்வழிப்பாதை 4-ன் விரிவான திட்ட அறிக்கை 2008-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதையடுத்து பக்கிங்காம் கால்வாயின் சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா திறன் அடையாளம் காணப்பட்டது என்று அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.