பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது கட்சியை கொடியை விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணத்தில், 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. 23 நட்சத்திரங்கள் பச்சை நிறமாகவும் , ஐந்து நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் இடம் பெற்றுள்ளன.
விஜய்-க்கு முதல் சிக்கல்:
இந்த நிலையில், கட்சி கொடி அறிமுகம் செய்து வைத்த அதே நாளில் சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ( BSP) சின்னமாக யானை உள்ளது. தங்களின் கட்சி சின்னத்தை விஜய் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தங்களின் சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக புகார் மனுவும் வழக்கும் தொடுக்கப்படும் என பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்சி கொடியில் உள்ள யானையால் சர்ச்சை:
வரும் 2026ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் களமிறங்கும் என விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த சூழலில், கட்சி பெயர், கட்சி கொடி, கட்சி பாடல் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.
2026 தேர்தலை மனதில் வைத்து தொடர்ந்து முனைப்பு காட்டி வரும் விஜய்-க்கு, கொடி தொடர்பாக வெடித்துள்ள சர்ச்சை பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக நீக்குமா? அல்லது வழக்கை எதிர்கொண்டு யானை சின்னத்தை தக்க வைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.