BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி இன்று சென்னை வருகிறார்.


பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடல்:


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி இன்று நேரில் வந்து, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இன்று நல்லடக்கம் - நீதிமன்ற தீர்ப்பு என்ன?


ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி, அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய, குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநாகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு பகுதியிலேயே உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களது கோரிக்கை அவசர வழக்காக இன்று காலை விசாரிக்கப்பட உள்ளது. அதன் முடிவிலேயே ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்பது உறுதியாகும்.


கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் தான் - காவல்துறை:


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தெரிவித்தது அதிர்ச்சியளித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், “கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சிசிடிவி பதிவு அடிப்படையில், கைதானவர்கள் குற்றவாளிகள்தான் என்பதை உறுதி செய்துள்ளோம்.  பல சிசிடிவி காட்சிகளை பார்த்து உறுதிசெய்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொண்டோம். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்பதற்கு ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் சமர்ப்பிக்கலாம். தற்போது சந்தேகத்தின் பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்” என தெளிவுபடுத்தியுள்ளார்.


11 பேருக்கு நீதிமன்ற காவல்:


ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கிற்கு பழிவாங்கும் நோக்கில் தான், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிக் கொன்றதாக 8 பேர் போலீசில் சரண்டைந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் மேலும்  3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சரண்டைந்த ஆற்காடு பாலு, திருமலா, மணிவண்ணன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.