வேலூர் நகரப் பகுதியில் அமைந்துள்ளது  சார்பனாமேடு மலை பகுதி . கடல்  மட்டத்தில் இருந்து சுமார் 1200  அடி உயரம் உள்ள இந்த சார்பனாமேடு மலையில் மராட்டிய மன்னர் காலத்து கோட்டை ஒன்று அமைந்துள்ளது .


சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த கோட்டை அங்கு வசிக்கும் மக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கும் , சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாகவும் மாறியுள்ளது. ஞாயிற்று கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து இருந்தால் கோட்டை பகுதிக்கு யாரும் செல்லவில்லை . இந்நிலையில் நேற்று மதியம் சற்று மழை நிற்கவே அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக கோட்டை பகுதிக்கு சென்றனர் . அப்பொழுது ஒரு கனமான இரும்பு பொருள் புதையுண்டு இருப்பதை கண்டனர் .




அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அதை சுற்றி பள்ளம் தோண்டிய இளைஞர்கள் , 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரும்பு பீரங்கி என்பதை உறுதி செய்து , கீழே இறங்கி வந்து மற்ற ஊர்மக்களுக்கும் தெரிவித்தனர் .


இந்த செய்தி காட்டு தீப்போல் பரவவே இன்று காலை வேலூர் அருங்காட்சியகத்தில் கியூரேட்டராக (அருங்காட்சியக மேற்பார்வையாளர் ) பணியாற்றும் K சரவணன் தலைமையிலான  தமிழ் நாடு தொல்பொருள் துறையை சார்ந்த பணியாளர்கள் சர்ப்பணமேடு மலைக்கு சென்று  அந்த பீரங்கியை ஆய்வு செய்தனர் .




ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய சரவணன் , மலைக்கு மேல் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ராஜா கோட்டை , வீரசிவாஜின் சகோதரர் துக்கோஜி ராவ் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது . அதன் பின்னர் ஆற்காட் நவாப் மற்றும் கடைசியாக ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இந்த கோட்டை இருந்துள்ளது .


இன்று அந்த பீரங்கியை ஆய்வு செய்ததில் , இந்த பீரங்கி 9 அடி நீளம் உள்ளதையும் அதிக சேதாரம் அடையாமல் நல்ல நிலையில் உள்ளதை உறுதி படுத்தி கொண்டோம் . ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற இந்த பீரங்கி உருவாக்கப்பட்ட சரியான ஆண்டை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை . பொதுவாக அனைத்து பீரங்கிகளிலும் அது உருவாக்கப்பட்ட வருடம், எந்த மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை ஒரு லோகோ போல் செய்து அந்த பீரங்கியுடன் இணைத்திருப்பார்கள் . ஆனால் இந்த பீரங்கியில் அந்த லோகோ பகுதி மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் , அதன் சரியான காலத்தை கணிக்க முடியவில்லை என்று தெரிவித்தார் .


மேலும் சரவணன் கூறுகையில் , தற்பொழுது தமிழ் நாடு தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  அருங்கட்சியகத்தில் 2  பீரங்கிகளும் , இந்திய தொல்பொருள் துறையின்  கட்டுப்பாட்டில் 3  பீரங்கிகளும் உள்ளது .




இந்த 5  பீரங்கிகளை காட்டிலும் , தற்பொழுது சார்பனாமேடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பீரங்கி மிகவும் அழகாகவும் , நல்ல நிலையிலும் உள்ளது . இந்த பீரங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோட்டை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் , இதனை இங்கிருந்து கீழே எடுத்து செல்ல , வனத்துறை , வருவாய் துறை மற்றும் இந்திய தொல்பொருள் துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் .




இந்த பீரங்கியின் ஒரு பகுதி இன்னும் புதையுண்ட நிலையில் உள்ளதால் விரைவில் அணைத்து துறை அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று இந்த பீரங்கியை பத்திரமாக அருங்கட்சியகத்திற்கு கொண்டு செல்லும் பணியினை தீவிர படுத்தி உள்ளோம் . பீரங்கியை முழுமையாக வெளியில் எடுத்த பின்னரே இது உருவாக்கப்பட்ட காலம் மற்றும் இதனின் முழு வரலாறும் தெரிய வரும் என்று கூறினார் .