இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒரு ப்ளாஷ்போக் போக வேண்டியிருக்கும். அது சாராயக் கடைகள், தமிழ்நாட்டில் ஆறாக ஓடிய காலம். குப்பனும், சுப்பனும் மட்டுமல்லாமல், ராஜாக்களும், சிவாக்களும் கூட சாராய கடையில் சங்கமித்திருந்த காலம். இன்று ‛1848... சிக்னேச்சர்... டீச்சர்ஸ்...’ என சில பிராண்டுகள் பெயரை கூறி, அதை நான் குடிச்சேன்...’ என பெருமை பீத்தும் இந்த காலகட்டம் போலவே அந்த காலகட்டத்திலும் ஒரு குரூப் இருந்தது. அவர்கள் கூறும் ஒரே வார்த்தை, ‛கடா மார்க் சாராயம்...’. குடிக்கிறது சாராயம் ... அதுல என்ன கடா மார்க்...? கடா மார்க் சாராயம் என்பது ‛கிக்’ தருவதில் வேறு ரகமாய் இருக்குமாம். சலம்பலும், அலம்பலும் நீடித்து தருமாம். இதனால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் கடா மார்க் சாராயங்களை விரும்பி பருகியதாக வரலாறு சொல்கிறது. இதற்கு கூடவா வரலாறு என்று கேட்டால், அதுவும் ஒரு வரலாறு தானே என்று தான் கடக்க வேண்டியிருக்கிறது.
காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதைப் போல, சாராயம் தூராயம் ஆனது. தமிழ்நாட்டில் சாராயம் என்று பேசினால் கூட கேஸ் வந்துவிடும். அந்த அளவிற்கு சாராயம் அபாய பொருளாகிவிட்டது. ஆனால் வெளிநாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா, பீர் போன்றவையெல்லாம் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. அரசு பொருளாகிவிட்டது. விற்பதும் அரசு, தடுப்பதும் அரசு. சரி நமக்கெதற்கு அரசியல்... விசயத்திற்கு வருவோம்...! தமிழ் சினிமாவில் எப்படி பெயருக்கு பஞ்சமோ... அது போல் தான் டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மதுபானங்களுக்கும் பெயர் பஞ்சம். என்ன தான் போதை வஸ்தாக இருந்தாலும், மதுப்பிரியர்களுக்கும் கொஞ்சம் வெரைட்டி தேவைப்படுகிறது. இதனால் மது உற்பத்தி நிறுவனங்கள், பிரபல வெளிநாட்டு மதுவகைகளின் பெயர்களில் உள்ளூர் தயாரிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். முடிந்த வரை எவ்வளவு கடினமான பெயராக இருக்குமோ... அப்படி இருந்தால் அதற்கு வேல்யூ அதிகமாம். அதாவது வாயில் நுழையாத பெயர் இருந்தால், கிராக்கி அதிகமாம். நல்ல சரக்கு என்று குடிமகன்கள் விரும்பி வாங்குவார்கள் என்கிற பிலாசபியும் இங்கு உள்ளது.
அப்படி எத்தனை பெயரை தான் கடன் வாங்குவது. ஒரு கட்டத்தில் வெளிநாட்டு நிறுவன பெயர்களை எல்லாம் வைத்து விட்ட பிறகு பெயரே இல்லாமல் திண்டாடினார்களோ என்னவோ... இப்போது உள்ளூர் பெயர்கள், அதுவும் உள்நாட்டு மொழியில் திரும்ப வந்துவிட்டது. 35 ஆண்டுகளுக்குப் முன் வைக்கப்பட்ட கடா மார்க் சாராயம் பெயரில், கடா மார்க் பிராந்தி விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம். கடா என்றால் அது ஆட்டு கடாவா, மாட்டு கடவா இல்லை எருமை கடவா என்கிற கேள்வி வரும். முன்பு எப்படி இருந்தது என தெரியவில்லை. தற்போது எருமை கடா போட்டோ அச்சிடப்பட்டு சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது விற்பனைக்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும், 140 ரூபாய் விலை கொண்ட இந்த பிராந்தி தான், தற்போது பிளாக்கில் விற்பது, மலிவு விலைக்கு விற்பது என அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் கடைக்கு வரும் எளியோர் கேட்கும் முதல் கேள்வி, ‛ஒரு 150 ரூபாய் குவாட்டர் கொடுங்க...’ என்பது தான். அவர்களுக்கு பிராண்ட் பெயர் தேவையில்லை. 150க்குள் இருக்கும் ஏதாவது ஒரு பாட்டில் தேவை. அவர்களிடத்தில் தான் தற்போது சென்று கொண்டிருக்கிறது கடா மார்க்.
கப்பு முக்கியம் பிகிலு என்பதைப் போல, நீங்க என்னதான் போதை வஸ்து விற்றாலும், பெயர் தமிழில் வெச்சிருக்கோம் பார்த்தியா என்கிற ரீதியில், சம்மந்தப்பட்ட நிறுவனம் பெயரை தமிழில் வைத்து தன் தமிழ் பற்றையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுக்கு பெயர் தான் எங்கும் தமிழ், எதிலும் தமிழா என்று சிலர் கிண்டலடிப்பதையும் பார்க்க முடிகிறது. எது எப்படியோ கிடா மார்க் மீண்டும் வந்துள்ளது. ஆனால் தமிழ்நாடு எப்போது தான் மீண்டு வரும்? பொறுத்திருந்து பார்க்கலாம்! கொஞ்சம் இருங்க... இதை சொல்ல மறந்துட்டேன்.... ‛மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு... பாதுகாப்பாக இருப்பீர்... மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்...’.
சுவாரஸ்யமான செய்திகளுக்கு....