குஜராத்தைச் சேர்ந்த டானிஷ் படேல், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள கல்குவாரியில் பணியாற்றினார். கடந்த 18.12.2019ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த வாய் பேச முடியாத 17 வயது சிறுவனை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம், டானிஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்தது.

 



 

இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து கீரனூர் இன்ஸ்பெக்டர் தரப்பிலும், தண்டனையை எதிர்த்து டேனிஷ் படேல் தரப்பிலும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, டேனிஷ் படேலின் மரண தண்டனையை 30 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டும், கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 10 ஆண்டும் என 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 



 

முறைகேடு செய்த கூட்டுறவு சங்க செயலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? - கூட்டுறவு சங்க பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு







 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த செல்லராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் செயலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் பினாமி பெயர்களில் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.  சங்க பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்  நீண்ட நாட்களாக பணி புரியும் செயலாளர்களை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் வேறு சங்கத்திற்கு இடமாற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன்  அமர்வு, "கூட்டுறவு சங்க செயலாளர்களை இரண்டு அல்லது மூன்றாண்டிற்கு ஒரு முறை இடமாற்றம் செய்வது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பரிசீலிக்க வேண்டும். முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தரப்பில்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு

வழக்கை முடித்து வைத்தனர்.