மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநிலச்செயலாளர் வினோஜ் பி. செல்வம் அஞ்சலி செலுத்தினார். 


நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


அவர் மறைந்து ஒரு மாதம் கடந்துவிட்டாலும் கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்தில் விஜயகாந்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு தேமுதிக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பிரேமலதா விஜயகாந்தும் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். 


மேலும் விஜயகாந்தை பற்றி புகழாதவர்கள் இல்லை. அரசியல், திரை பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் நினைவிடம் மற்றும் அவரது இல்லத்துக்கு சென்று குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில், “பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தேமுதிக பொதுச்செயலாளர் அக்கா பிரேமலதா விஜயகாந்த் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிய உங்கள் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கும் கேப்டன்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் விஜயகாந்தின் நினைவுகளை பற்றி கருத்துகளை தெரிவித்துகின்றனர். 




மேலும் படிக்க: Thalapathy Vijay: தமிழக முன்னேற்ற கழகம்.. வைரலாகும் விஜய் அரசியல் கட்சி பெயர் - பலரும் வரவேற்பு