விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும், ஒரே நாளில் கடந்த 11ம் தேதி வெளியானது. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றன. விஜயின் வாரிசு திரைப்படம் உலகளவில் முதல் 5 நாட்களில் ரூ.150 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேநேரம், அஜித்தின் துணிவு திரைப்படம் ரூ.175 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


அண்ணாமலை பேட்டி:


இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது தனது பொழுதுபோக்காக அவ்வப்போது படங்கள் பார்ப்பேன் எனவும், அண்மையில் தனது மகனுடன் சேர்ந்த அவதார் திரைப்படம் பார்த்ததாகவும் கூறினார். தொடர்ந்து,  துணிவு மற்றும் வாரிசுதிரைப்படங்கள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ” பொங்கல் முடிந்த பிறகு வாரிசு மற்றும்  துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பார்க்க காத்திருக்கிறேன். வார இறுதியில் நேரம் கிடைத்தால் சனிக்கிழமை ஒரு படத்தையும், ஞாயிற்றுக்கிழமை மற்றொரு படத்தையும் பார்த்து விடுவேன்.” என கூறினார்.


விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?


விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்ட போது, எனக்கு இரண்டு பேரையும் பிடிக்கும். அரசியல்வாதியாக நடுநிலையாக சொல்கிறேன் என எடுத்துக்கொள்ள வேண்டாம். விஜய் ஆரம்ப காலத்தில் நடிப்பிற்கு வந்தபோது நான் பார்த்துள்ளேன். அவரது நடிப்பு திறமை, அவர் எப்படி இருந்தார்,  ஆகியவற்றை முதல் படத்தில் பார்த்து இருக்கிறேன். இன்றைக்கு பார்க்கும்போது உண்மையாகவே அவர் பிரமாண்டமாக இருக்கிறார். அவரது நடனம், மேடை நாகரீகம் மற்றும் கதாபாத்திரத்தை கையாளும் விதம் ஆகியவற்றில் நடிகராக வேற லெவலில் வளர்ச்சி கண்டுள்ளார்.” என அண்ணாமலை கூறினார்.


”அஜித்தை ஏன் பிடிக்கும்”


”அஜித் என்பவர் ஒரு சாதாரண நபரின் ஆதர்ஷன நாயகன். சாதாரண நபர் பெரிய ஆளாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பெட்டியை தூக்கிக் கொண்டு வரும் நபருக்கு, அஜித் ஒரு உதாரணம்” என, அண்ணாமலை பேசினார்.


முதலில் துணிவா, வாரிசா?


முதலிடல் எந்த படத்தை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, ”முதலில் எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அந்த படத்தை பார்பேன்” என அண்ணாமலை கூறினார்.