மதுவிலக்கு குறித்து திருமா வைத்த கோரிக்கையையும் முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று பாஜகவின் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன் “கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு ரூ.178 கோடி மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். தமிழகம் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான் நிதிக்குழு வந்துள்ளது. கோரிக்கைகளை முதலமைச்சர் வைத்துள்ளார். அதிகமான நிதி பகிர்வு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 


ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். மருத்துவ கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கான இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் பெற முடியாததற்கு காரணம் அரசு மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப வேண்டும். சமீபத்தில் கூட மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். 


அரசு மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தவறியதால் பல மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்களாக வேலை பார்க்கின்றனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் முதலில் இதை சரி செய்ய வேண்டும். முதல்வர் திருமாவளவனின் மனதை புரிந்து கொண்டு அதை சரி செய்கிறேன் என்று சொல்கிறாரே தவிர தமிழக மக்களின் மனதை புரிந்துகொண்டு சரி செய்கிறேன் என்று சொல்ல மாட்டேங்குறார். திருமாவளவனின் மனதை புரிந்துகொண்டு அவர் ஒரு வருடத்திற்கு முன்பு சிப்காட் தொழிற்சாலை வேண்டும் என்று கேட்டார் அதை ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றுகிறேன் என்று சொல்கிறார் முதல்வர். ஆனால் திருமாவளவன் மாநாடு நடத்தி கோரிக்கை ஒன்றை வைத்தாரே? மது விலக்கு வேண்டும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தாரே? முதலமைச்சர் ஸ்டாலின் அதையும் நிறைவேற்றுவாரா? இந்த கோரிக்கை எவ்வளவு நாட்களில் நிறைவேற்றுவீர்கள் என்று திருமாவளவன் கேட்க மாட்டார். அவருக்கு என்ன சூழ்நிலை என்றால் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கோம் இருக்கோம் என்று சொல்லிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. அதனால் அவர் கேட்க மாட்டார். நாம் கேட்போம். 


அவர் மனதுக்கு நெருக்கமானவர் என்று சொல்லும் ஸ்டாலின் திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கையை எப்போது நிறைவேற்றுகிறார் என்று சொன்னால் பராவயில்லை. 


இதற்கும் மேலாக நடிகை கஸ்தூரியின் கைது. அவர் தவறான கருத்துக்களை சொன்னார். அதற்காக மன்னிப்பும் கேட்டார். அதற்காக அவரை தீவிரவாதிபோல தமிழக காவல்துறை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. அதன் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் கஸ்தூரியை தீவிரவாதிபோல் நடத்துவது நீங்கள் பாராபட்சமாக நடந்துகொள்கிறீர்கள். பாராபட்சமாகதான் இவர்களின் கருத்துரிமை பாதுகாக்கப்படுகிறது என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.