தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல், ஆளும் தி.மு.கவின் கோரமுகத்தை தெளிவாக வெளிப்படுத்தியது. ஒரு ஆட்சியில் அரசு எந்திரம் இத்தனை தூரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. இதுவரை நடந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு, தி.மு.கவின், இதற்கு முந்தைய அராஜகத்தை எல்லாம் விஞ்சியது. தி.மு.கவினரை பார்த்துக் காவல்துறை அஞ்சியது. மாநில தேர்தல் ஆணையம் மகிழ்வாகத் துஞ்சியது அராஜக குண்டர்களிடம் மாவட்ட நிர்வாகம் அடிபணிந்துக் கெஞ்சியது. வாக்குச்சாவடிகளுக்கு வெளியே, வழக்கறிஞர்கள் போல கருப்பு வெள்ளை உடையிலே, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், ஐம்பதிலிருந்து நூறு பேர் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை விரட்டியடிக்கும் துணிவு இல்லாமல், பணிவு காட்டிய காவல்துறை தன் ஆளும்கட்சி விசுவாசத்தை செம்மையாக செய்து முடித்தது.




கொரோனா நோயாளிகளுக்காக என்று வரையறுக்கப்பட்ட மாலை நேரம். 5.00லிருந்து 6.00மணி வரை, கள்ள வோட்டுக்காக திமுகவால் திட்டமிடப்பட்டிருந்ததை, அறிந்தே தனி நேரம் தரப்பட வேண்டாம் என தடுத்துப் பார்த்தோம் ஆனால் எதிர்பார்த்தபடி கொரோனா வைரஸ் நேரத்தை சமூக விரோத வைரஸ்கள் எடுத்துக் கொண்டன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களின் உள்ளே புகுந்த திமுக குண்டர்கள் சரளமாக தடைகள் இன்றி கள்ள வாக்குகளைப் பதிவு செய்தார்கள். மத்திய தேர்தல் பார்வையாளர்களையும், மத்திய ரிசர்வ் படையையும் அனுமதிக்க மாட்டோம். இது எங்கள் மாநில உரிமை என சத்தமிட்ட திமுகவின் காரண காரிய கோரமுகம் வெளிப்பட்டது. கோவை 63வது வார்டில் மண்டபங்களில் கரூரைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் பரவலாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு கள்ள ஓட்டு போடுவதற்காக பணம் வழங்கப்பட்டது இவை அத்தனையும் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




சென்னையில் மண்டலம் 7 வார்டு எண் 88, இங்கு திமுகவினர் சாவடிக்குள் குழுவாக நின்று கொண்டு வாக்காளர்களிடம் திமுகவிற்கு ஓட்டுப்போட வலியுறுத்தினர். மாலை 5 மணிக்கு மேல் கள்ள ஓட்டு போடுவதற்காக காவல்துறை அனுமதியுடன் குழுவாக வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றனர். இவை அத்தனையும் வீடியோ பதிவுகளாக ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல வார்டு 141, போலீசாரின் ஆதரவுடன் திமுகவினர் அராஜகத்தில் கொடி கட்டிப் பறந்தது. அதைப் பதிவு செய்த தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரிடம் காவல்துறையினர் தகராறு செய்தது வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வார்டு 179ல் அத்துமீறி நுழைந்த திமுகவினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளனர். வடசென்னையில் ஆர்.கே.நகர் வார்டு எண் 40, வார்டு எண் 43, ராயபுரத்தில் வார்டு 48, 49,51,52 ஆகிய பகுதிகளில் தாறுமாறாக கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. ஆளும் கட்சியினரை சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் சென்று வர அனுமதித்தது. திமுக குண்டர்கள் ஆளும் காவல்துறையால் அச்சுறுத்தப்பட்டனர். இதில் வார்டு எண்கள் 49 மற்றும் முழுமையாக திமுகவினரால் கைப்பற்றப்பட்டு. கள்ள ஓட்டுக்கள் 51 போடப்பட்டன. சென்னை வேளச்சேரி டான்சி நகரிலும் திமுக குண்டர்கள் நடத்திய அராஜகத்தால் வாக்களிக்க வந்த மக்கள் கூட அச்சத்தினால் வாக்களிக்காமல் திரும்ப நேரிட்டது. வாக்கு சதவீதம் 50%ம் கீழே செல்லக் காரணம் மக்களுக்கு ஏற்பட்ட அச்சமே.


சென்னையில் வார்டு 140-ல் 5 வாக்குச்சாவடிகளிலும், வார்டு 113-ல்  எட்டு வாக்குச்சாவடியில், வார்டு 49-ல் ஒரு வாக்குச்சாவடியில், வார்டு 179-ல் 3 வாக்குச்சாவடியில், வார்டு 114-ல் 3 வாக்குச்சாவடியில் என்று ஒட்டுமொத்தமாக 40க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் திமுகவினரின் அத்துமீறல் தங்குதடையின்றி நடைபெற்றது. செங்கல்பட்டு வார்டு 70-ல், வாக்குச்சாவடி மையம் 453-ல் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது பத்திரிக்கையிலும் செய்தியானது.


திருச்சியில் வார்டு எண் 56-ல் திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி இருமுறை வாக்களித்த விநோதம் நடைபெற்றுள்ளது. இவரை தகுதி நீக்கம் செய்ய புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நாகர்கோவிலில் வார்டு எண் 4,11, மற்றும் 38ல் அதிகாலை நேரத்தில் பல வீடுகளில் திமுகவினரின் பூத் சிலிப்புடன் பணம் வீசப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டம் வார்டு எண் 41ல் திமுக வேட்பாளர் தண்டபாணி மாவட்ட துணை கலெக்டர் இடம் வாக்கு சாவடி மையத்திலிருந்து வெளியேற மறுத்துப் போராடியது செய்தித்தாள்களில் கூட செய்தியாக இடம் பெற்றது. 




சேலத்தில் இடைப்பாடி கிராமத்தில் அலச்சம் பாளையம் கிராம பள்ளியில் திமுக வேட்பாளரின் சகோதரர் கணேசன் காவல்துறையை மிரட்டியது கள்ள ஓட்டு போட வைத்தது ஜனநாயகப் படுகொலை. திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளரை திமுக வேட்பாளர் தாக்க அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுகிறார். காவல் நிலையத்திற்குள் அடியாட்களுடன் நுழைந்த திமுக வேட்பாளர், காவலர்களின் கண் முன்னே, அதிமுக வேட்பாளரையும் கடுமையாக தாக்குகிறார் ஆதாரங்களுடன் பத்திரிக்கை செய்திகளுடன் இதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். திமுக வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? தமிழக டி.ஜி.பி சொல்கிறார். தமிழகத்தில், சின்ன அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் நடந்தது உண்மைதான் ஒரு வேளை திமுகவின் அராஜகத்தை காவல் துறை அடக்க முயற்சி செய்திருந்தால், அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.

 

மதுரை திருமங்கலத்தில் 2ஆம் வார்டிலும் 17 ஆவது வார்டிலும் திமுக வேட்பாளர் ராம்குமார் மற்றும் அவரது ஆட்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிப் போட்டு உடைக்கிறார். இதை காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. சாமானியர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல முடியுமா? வாக்கு பதிவு அறைக்குள் செல்ல முடியுமா? வாக்கு எந்திரத்தில் தொட முடியுமா? அதை தூக்கிப் போட்டு உடைக்க முடியுமா? இதேபோல மாநிலம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் கட்டவிழ்த்து விடப்பட்ட குண்டர்களாக செயல்பட்டனர். ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களையும் மற்றும் அமைச்சர்களையும் நிர்வாகிகளை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்க கூடாது. நியாயமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும். பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தை அழைக்க வேண்டும். அனைத்து நடவடிக்கையையும், குறிப்பாக வாக்குபதிவு எண்ணிக்கையை காட்டுவது தெளிவாக வீடியோ பதிவு எடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையையாவது மனசாட்சியுடன் நடத்துமா? அல்லது ஆளும் கட்சிக்கு துணை போகும் அவலத்தைத் தொடருமா?” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.