தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முற்றிலுமாக தரப்பட்டுவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ பிராண்ட் உணவு பொருள் மீதான வரி குறித்து திமுகவினர் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகளும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது.
ஆடத் தெரியாதவர் மேடையை பார்த்து கோணல் என்று சொன்னது போல ஜி.எஸ்.டி அமைப்பு குறித்து குறை சொல்கிறார் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன். கேள்வி கேட்டு தமிழில் பேச சொல்லிவிட்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழில் பதில் சொன்னபோது எழுந்துபோன திமுக எம்.பிகள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு மத்திய அரசை எப்படி குறைக் கூற முடியும் என்று கேள்வியும் எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு என்று சொல்லி தன்னுடைய 2 ஜி ஊழலை ஆ.ராசா மறைக்க பார்க்கிறார். நாடாளுமன்ற நடக்கும்போது எம்.பியான ராஜா ஏன் இதனை அங்கு பேசவில்லை. மக்கள் இன்னும் 2 ஜி ஊழலை மறக்கவில்லை. 2 ஜி வழக்கின் மேல்முறையீடு வழக்கு நடந்துக்கொண்டிருக்கிறது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஒன்று என்று ஆ.ராசா சொன்னால், அதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
கனல் கண்ணன் பேசியது தவறு என்றால் ; திமுகவினர் மேடைகளில் பேசுவது எல்லாம் ‘பாவம்’. செந்தில்பாலாஜிக்கு தைரியம் இருந்தால் மின்சாரத்துறை ஊழல் குறித்து நான் பேசியதற்கு என் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும் ; நான் இன்னும் 4 நாட்கள் சென்னையில்தான் இருப்பேன். செந்தில்பாலாஜி எங்கும் ஓட முடியாது அடுத்து நிலக்கரி ஊழலில் சிக்குவார். செந்தில்பாலாஜி பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னர் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்டு பேட்டி கொடுத்துவிட்டால், நான் அரசியலில் இருக்கும் வரை செந்தில்பாலாஜி பற்றி பேசமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்