கடந்த 2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க கொடுக்காத வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அளித்ததாக பேசி வருகிறார் என்றும் ஊழல்வாதிகள் வெளிநாட்டில் பணத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், “ தமிழக முதல்வர் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார். அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் சொல்லவில்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்? தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு? கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், ” பாஜக அறிவித்த ஏதாவது ஒரு வாக்குறுதியையாவது நிறைவேற்றியுள்ளதா? வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தது. ஆனால், 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை அதனை நிறைவேற்றவில்லை” என கூறியுள்ளார்.