அதிமுக தலைமைக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது. தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகும் நிர்வாகிகளை கூட்டணி கட்சியான அதிமுக தன் கட்சியில் சேர்ந்து கொண்டது அந்தக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்தார்.


ஊழல் மிகுந்த மாநிலம்:


இப்படியான சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து அதிமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுதியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


தரக்குறைவாக பேசவில்லை:


நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கை வெளியிட்டார். இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “ஊழலில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக மாறியுள்ளது தமிழ்நாடு, அதனை சரி செய்ய வேண்டும் என்று தான் கூறியுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி, அவரது ஆளுமை பற்றி நான் கூறியுள்ளேன். யாரை பற்றியும் தரக்குறைவாக பேசவில்லை.


இந்த கருத்து தவராக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தலைமை செயலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஊழல் ஊடுருவி உள்ளது. எந்த இடத்திலும் ஜெயலலிதா பற்றி தவறாக பேசவில்லை. தரம் தாழ்ந்த கருத்துக்களுக்கு, தரம் தாழ்ந்து பேச மாட்டேன். ஜெயலலிதா போல் வர வேண்டும் என நான் கூறும் போது கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்” என கூறியுள்ளார்.