தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு பாலியல் புகார்கள் தொடர்பாக தி.மு.க. நண்பர்கள் வைரமுத்துவிடம் கேள்வி கேட்கட்டும். அதுமட்டுமின்றி நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எல்லா குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு. அப்போ உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா?” என குறீப்பிட்டார். 


ஜூலை 9-ந் தேதி நடைபயணம்:


மேலும், “ஜூலை 9 ஆம் தேதி  நடைப்பயணம் ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும். இது குறித்து விரிவான அட்டவணை வெளியிடப்படும். இந்த நடை பயணத்தில் தேசிய தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த நடைப்பயணம் 6 மாத காலத்திற்கு நடைபெறும். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதி துறையிலிருந்து மாற்றம் செய்தது, தி.மு.க. மதுரை மண்ணிற்கு செய்த துரோகம்.


குற்றச்சாட்டை யார் வேண்டுமானாலும் சுமத்தலாம். பா.ஜ.க பிடிஆர் மீது குற்றம் சுமத்தியது, ஆனால் அவர் ஒரு நூல் கூட தவறு செய்யவில்லை. ஆடியோ விவகாரத்தில் பி.டி.ஆர். வேறு துறைக்கு மாற்றம் செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதன் மூலம் திமுக ஆட்சியில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லை என்பதை இந்த துறை மாற்ற செயல் வெளிப்படுத்தியுள்ளது என கூறினார்.


ஒரே காரணம்:


தொடர்ந்து பேசிய அவர், “ கருத்தியல் அடிப்படையில் எங்களிடையே மாறுபாடு இருந்தாலும், படித்தவர், பாரம்பரிய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர் என்ற பெருமை இருந்தது. ஆனால் முதல் குடும்பத்தை (முதலமைச்சரின் குடும்பம்) பற்றி பேசிய ஒரே காரணத்திற்காக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது மதுரை மண்ணிற்கு திமுக செய்துள்ள துரோகமாகும். வருமான வரி துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த வெட்கக்கேடான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரவுடீஸம் செய்வது தான் திமுக அரசு” என கூறியுள்ளார். 


முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு, “ தமிழ்நாட்டிற்கு ஆக்கபூர்வமான விஷயங்களை முதலமைச்சர் கொண்டு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டார்.