நடைபயண திட்டத்தை அறிவித்தார் அண்னாமலை:


கடலூரில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய அண்ணாமலை, ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் தமிழ்நாடு முழுவதற்குமான தனது நடைபயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார். ராகுல் காந்தி நாடு முழுவதற்குமான ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள நிலையில், அண்ணாமலை தமிழகம் முழுவதற்குமான தனது நடைபயணத்தை அறிவித்துள்ளார்.


9 தீர்மானங்கள் நிறைவேற்றம்:


இதனிடையே, பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  அதன்படி, முதலாவதாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்ற பாரத பிரதமருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக  அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்:


ராமர் பாலம் பாதிக்கப்படாமல்  சேது கால்வாய் திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் எனவும்,  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி தமிழ்சங்கம் தந்து தேசத்தை பாதுகாத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு எனவும்,  தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே  பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும்  திமுக தலைமையிலான அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழக அரசை கண்டித்து தீர்மானம்:


கட்சி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கவும்,  பூத் கமிட்டியை வலுப்படுத்தவும்,  தமிழக விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக கண்டித்தும், தமிழகம் தொழில் வளர்ச்சி 8ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறுதியாக, பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்ட நட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதைதொடர்ந்து, நடப்பாண்டிற்கான 14 நிகழ்ச்சி நிரல்களும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன. பிற்பகலுக்குப் பிறகும் பாஜகவின் செய்ற்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.