அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற  சேகர் பாபு மீதும் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் பாஜக முறையிட்டுள்ளது.


ஆளுநரிடம் பாஜக புகார்: 


பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.






 


அதோடு, ஆளுநரை சந்தித்து பாஜக தலைவர்கள் புகார் வழங்கியது தொடர்பான புகைப்படத்தையும் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.


புகார் விவரங்கள்:


அண்ணாமலை பெயரில் வழங்கப்பட்டுள்ள அந்த புகாரில், “ தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த வெறுப்புப் பேச்சை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.


செப்டம்பர் 2, 2023 அன்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ”சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்ற அனுமதித்தவர்களுக்கு நன்றி. இந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் பொருத்தமானது. இந்த மாநாட்டுக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயர் சூட்டியதற்கு வாழ்த்துகள். சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது; கொசுக்களைப் போல அவற்றையும் ஒழிக்க வேண்டும். டெங்கு, மலேரியா, கரோனா போன்ற சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்.



முதலில் நாம் செய்ய வேண்டியது சனாதனத்திலிருந்து விடுபடுவதுதான். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சனாதனத்தின் பொருள் நிலையானது மற்றும் மாறாதது, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என பேசியுள்ளார்.


 


உதயநிதி ஸ்டாலின் இன்று வரை தனது அறிக்கையை வாபஸ் பெறவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை, மேலும் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் வழியில் தான் பேசுவதாக வாதிட்டு வருகிறார். இந்த நேரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு நவம்பர் 5, 1957 அன்று எழுதியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.


"ஈ.வெ. ராமசுவாமி நாயக்கர் தொடர்ந்து நடத்தி வரும் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். இதைப் பற்றி சில காலத்திற்கு முன்பு நான் உங்களுக்கு எழுதினேன், இந்த விஷயம் பரிசீலனையில் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ராமசாமி நாயக்கர் மீண்டும் அதே விஷயத்தைச் சொல்லி, சரியான நேரத்தில் மக்களைக் குத்திக் கொல்லத் தொடங்குங்கள் என கூறுவார் என தெரிகிறது.  அவர் சொல்வதை ஒரு குற்றவாளி அல்லது பைத்தியக்காரனால் மட்டுமே சொல்ல முடியும், அவர் எப்படிபட்டவர் என்பதை தீர்மானிக்க எனக்கு போதுமான அளவு அவரைத் தெரியாது, ஆனால் ஒன்று. இந்த வகையான விஷயம் நாட்டில் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது” என குறிப்பிட்டு இருந்தார்.


இப்படி சமுதாயத்தின் ஒரு பிரிவினரைக் குத்திக் கொல்லும் அறைகூவல், சனாதன தர்மம் முழுவதையும் ஒழிக்க வேண்டும் என்ற அழைப்பில் இருந்து எப்படி வேறுபட்டது ? ஈ.வெ.ராமசாமியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லி, உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களைக் குத்திக் கொல்ல சிபாரிசு செய்கிறாரா?


ஏப்ரல் 28, 2023 அன்று, வெறுப்பு பேச்சு தொடர்பாக யாரும் புகாரளிக்காவிட்டாலும் மாநில அரசுகள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.  அதன்படி, வெறுப்புப் பேச்சு 153A, 153B, 295A மற்றும் IPC 505 ஆகிய பிரிவுகளின் கீ, உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.


நம் நாட்டில், குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள், சைவர்கள், வைணவர்கள், சாஸ்திரங்கள், ஸ்மார்த்தர்கள் என வழிபடும் மக்கள், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையால் மிகவும் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் பாஜக சர்பில் நூற்றுக்கணக்கான புகார்கள் வழங்கப்பட்டுள்ளன.  துரதிர்ஷ்டவசமாக காவல் துறை இந்த விஷயத்தில் ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை.


4 செப்டம்பர் 2023 அன்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பொதுக்கூட்டத்தில் காவல் துறை இல்லையென்றால் காஞ்சி மடத்தை இடிப்போம் என்று கூறினார். சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்விளைவாக இவை உணரப்பட வேண்டியவை. உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே தமிழகத்தில் அமைதியை குலைத்துள்ளார்.  மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனைப் போலவே அவர் மீதும் நடந்து கொள்ள வேண்டும், ஆனால் தமிழக முதலமைச்சரின் மகன் என்ற பாக்கியத்தால் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையால் பாதுகாக்கப்படுகிறார். ஆளுநர் அவர்களே, இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.  இந்திய உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, அமைச்சர் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும்,  நடவடிக்கை எடுக்கவும் மாநில டி.ஜி.பி.க்கு தயவுசெய்து அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.