தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி இந்திய அளவில் பல மாநிலங்களில் தங்களது கட்சியை வளர்த்து நிலை நாட்டி இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் மட்டும் பாரதிய ஜனதா கட்சியால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கட்சி பெரிய வளர்ச்சி அடையவில்லை. இதனை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை கூட்டணி கட்சிகளின் ஆதரவின்றி தனித்து தனித்துவத்துடன் கொண்டுவர முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கிய பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, அவர் வகித்த தமிழ்நாடு பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவியினை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அண்ணாமலைக்கு வழங்கியுள்ளது. மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை தமிழ்நாட்டில் கட்சியினை பெரிய ஒரு அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதனை அடுத்து பல்வேறு திட்டங்களையும் வியூகங்களையும் மத்திய பாரதிய ஜனதா கட்சி வகுத்து வைத்துள்ளதாகவும், முதற்கட்டமாக "இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என தலைப்பிட்டு ஒரு திட்டத்தினை கட்சியை வளர்ப்பதற்காக கட்சியினரிடையே அறிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" என்ற தலைப்பில் பொது மக்களை சந்தித்து கட்சியை வளர்க்கவும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், அனைத்து பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இத்திட்டத்திற்கான மாநில பொறுப்பாளராக, மாநில துணைத் தலைவர் கருப்பு.முருகானந்தம், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளராக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் ஆகியோரை நியமித்துள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் இத்திட்டம் குறித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்த இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு.முருகானந்தம் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கருப்பு.முருகானந்தம், ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கும் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்" இத்திட்டத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் பங்கேற்று, மாநில செயலாளர் தங்க.வரதராஜன் வழிநடத்துதலின்பேரில் செயல்பட்டு, அனைத்து பொதுமக்களையும் வீடு வீடாக சென்று சந்தித்து, பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை விளக்கி, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.