பாரதமாதா நினைவாலயத்தில் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க நுழைவுவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான கே.பி. ராமலிங்கம் பூட்டை உடைத்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாஜக மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேபி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர். அப்பொழுது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில், அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர்.
இருப்பினும், அதற்கு கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா என பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவை பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து திறந்தார்.
பின்னர், பாரதமாதா திருவுருவச்சிலைக்கு பாஜகவினர் மலர்மாலை அணிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இம்மாதிரியான செயல்களில் பாஜக ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. பல சமயங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
குறிப்பாக, கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தபோது, கடைகளை மூட சொல்லி வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை டிஸ்ப்ளே பிக்சராக வைக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, பாஜகவின் மூத்த தலைவர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் டிஸ்ப்ளே பிக்சராக தேசிய கொடியை வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்