குடியரசு தலைவர் தேர்தலுக்காக பாஜக அமைத்த மேலாண்மை குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனவாசன் இடம்பெற்றுள்ளார். மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தலைமையில் அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழுவில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அஸ்வினி வைஷ்னவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து பாஜக சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்க பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில் பாஜக முயற்சி மேற்கொண்டுவருகிறது.
இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆகியவையுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜகவின் இரண்டு மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு மூத்த தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, கடைசி நேரத்தில் பாஜக தங்களை அணுகியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்த பிறகே, பிற கட்சிகளுடன் பாஜக ஆலோசனை மேற்கொண்டது. இறுதியில், தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த குடியரசு தலைவரானார்.
எதிர்கட்சி சார்பில் போட்டியிட்ட மீரா குமார், ராம்நாத் கோவிந்துடன் தோல்வியை தழுவினார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 29ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தேவைப்பட்டால், ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24, 2022 அன்று முடிவடைகிறது. மேலும் அரசியலமைப்பின் 62 வது பிரிவின்படி, பதவிக் காலம் முடிவடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் அறுபதாம் நாள் அல்லது அதற்குப் பிறகு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சட்டம் குறிப்பிடுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்