பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின்:
சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அமைத்தபோது, அனுமதி இல்லை என எதிர்ப்பு எழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்தியதாக, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட மனுதாரர்கள் 6 பேருக்கும் நிபந்தை ஜாமின் வழங்கியதோடு, சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கு இழப்பீடாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்க மாட்டோம் என, பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். அதோடு, ”55 அடி உயர கொடிகம்பம் வைப்பது முட்டாள் தனமான முடிவு, காக்கா, குருவி உட்கார தான் அந்த கம்பம் பயன்படும், மக்களின் கண்களுக்கு கொடி தெரியவே தெரியாது” எனவும் நீதிபதி தெரிவித்தார்.
முதல் மனு தள்ளுபடி:
கொடிக் கம்ம்ம் அகற்றுவதில் பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்ட வற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, அனைவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நவம்பர் 30ம் தேதி வரையிலும் அவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தான் உயர் நீதிமன்றத்தை நாடி, அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் பெற்றுள்ளார்.
இரண்டாவது வழக்கு:
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பல்வேறு இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதில், பேருந்து நிறுத்தங்களில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டுமே இருப்பதாகவும், பிரதமர் மோடியின் படம் இல்லை என அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படத்தை அந்த விளம்பரங்களில் ஒட்டினார். இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை அகற்றியதாக அவர் மீது கோட்டூர்புரம் பேலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமின் பெற்று இருந்தார்.