தீபாவளி செல்லும் மக்களுக்கு கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு

 

தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களுக்காக தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.

 

 

இதை அடுத்து சொந்த ஊர்களுகு இன்று செல்வதற்காக அரசு சொகுசு பேருந்துகள் முன் பதிவு செய்த பயணிகள் செல்ல ஏதுவாக சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது நேற்று முதல் பயணிகள் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.




கிளாம்பாக்கம் பேருந்து முனையும் இதுவரை திறக்கப்படவில்லை என்றாலும்,  முன் பதிவு பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்பேடு செல்ல வேண்டிய சூழல் தடுக்கப்பட்டுள்ளது.




இதேபோன்று கோயம்பேட்டிலிருந்து கிளம்பக்கூடிய ஆம்னி பேருந்துகள், வானகரம் வழியாக வண்டலூர் வெளிவட்டச் சாலையில் சாலை வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  வந்து அடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட நபர்கள்  கிளாம்பாக்கத்தில் இருந்து   செல்ல இருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.




 சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன ?


பயணிகள்  எந்தவித சச்சரவும் இன்றி செல்வதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று பேருந்து வருவதை ஒலி வாங்கி மூலம் போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிப்பு தர உள்ளார்கள்.  மொபைல் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து வரும் வரை காத்திருந்து அமர்ந்து செல்வதற்கு தற்காலிக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் விவரம்


நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், நவம்பர் 10 ஆம் தேதி 3,995 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகள் என மொத்தமாக 3 தினங்களில் மட்டும் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணிகள் திரும்புவதற்காக 13 ஆம் தேதி 3,375 பேருந்துகளும், 14 ஆம் தேதி 3,075 பேருந்துகளும், 15 ஆம் தேதி 3,017 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. மற்ற இடங்களுக்கு 3,825 பேருந்துகள் இயக்கப்படுகிறது.




தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள சுமார் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்படுகிறது. தீபாவளி என்பதால் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு மக்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு தகுந்த நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வசதியாக வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.