அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சருக்கு உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதில் பெங்கேற்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் 21ஆம் தேதி பாஜக குழு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க கோரி முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிடகோரி மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். ஆளுநர் நேரடியாக தலையிட்டு மது தொடர்பான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 


2014-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, லஞ்ச தொகை வாங்கியதாக அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அவர் ஊழலாக பெற்ற தொகை திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாக கூறி அந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. எனவே இந்த ஒரு வழக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட இதில் தவறு நடக்கக்கூடியதற்கான வாய்ப்புகள் இருந்தும் தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய மறுத்தது ஏன்? அது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  ஊழல் என்பது அரசிற்கும் சமுதாயத்திற்கும் எதிரானது எனவும், அதை அனுமதிக்க முடியாது என்றும் கூறிய நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும், வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 


இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணையை தொடர இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் பட்சத்தில் அவர் மீது போலீஸ் விசாரணை எந்த மாதிரியாக நடக்கும்? எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க கோரி முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரி, ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளதாக அண்ணாமலை இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.